நாக்பூர்: கொச்சி ஐபிஎல் அணியின் பங்குதாரர்களுக்கிடையே திடீரென கடைசி நேரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த அணி மீதான நடவடிக்கையை டிசம்பர் 5ம் தேதி வரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக இன்று கூடிய ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், கொச்சி அணி மீதான நடவடிக்கையை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், தங்களது உரிமையாளர் பிரச்சினை குறித்து தீர்வு காணும் சாத்தியம் குறித்து கொச்சி அணியின் பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எங்களது சட்ட நிபுணர்கள் ஆராயவுள்ளனர். எனவே டிசம்பர் 5ம் தேதி வரை முடிவு எடுப்பது ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக கொச்சி அணியின் முதலீட்டாளர்களான ஆங்கர் எர்த், பரினி டெவலப்பர்ஸ், ரோசி ப்ளூ, பிலிம் வேவ் ஆகியோர் விலகுவதாக அறிவித்தால் கொச்சி அணியின் கதை முடிந்தது உறுதியானது. இருப்பினும் தற்போதைய திடீர் திருப்பத்தால் அந்த அணி தப்பும் சூழல் உருவாகியுள்ளது.