இந்திய அணியின் தொடர் தோல்வி.. மேலும் 2 பயிற்சியாளர்கள் நீக்கம்??.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
டாக்கா: இந்திய அணியின் தொடர் தோல்விகளால் மேலும் 2 பயிற்சியாளர்களை பணியில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக சென்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது.
வங்கதேச சுற்றுப்பயணத்திலாவது மகிழ்ச்சி தரும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து இந்திய அணி ஏமாற்றியுள்ளது.

இந்தியாவின் சொதப்பல்
2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இந்த முறையாவது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். உலகக்கோப்பைக்கு தயராக இன்னும் சுமார் 20 போட்டிகளே உள்ள சூழலில் இந்தியா இப்படி தோற்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ அதிரடி
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.கே. திலிப் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரின் பணிகள் திருப்திகரமாக இல்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து இந்த மாதம் நடைபெறும் ரிவ்யூவ் மீட்டிங்கில் ஆலோசிக்கவுள்ளனர்.

ரோகித்தின் குற்றச்சாட்டு
இதுகுறித்து குற்றம்சாட்டியிருந்த கேப்டன் ரோகித் சர்மா, அணிக்குள் சில காய பாதிப்புகள் இருந்துக்கொண்டே தான் உள்ளன. அது எப்படி நடக்கிறது என தெரியவில்லை. ஒருவேளை அதிகப்படியான கிரிக்கெட் ஆடுவதால் இது நடந்திருக்கலாம். அதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும். இந்திய அணிக்கு வந்தால் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். பாதி உடற்தகுதியுடன் அவர்கள் விளையாட முடியாது என கூறியிருந்தார்.

யாருக்கெல்லாம் காயம்
ரோகித் கூறியதை போன்றே, நிறைய காய பாதிப்புகள் இந்திய அணிக்குள் உள்ளன. ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் என்.சி.ஏவில் இருந்து வரவில்லை. மற்றொருபுறம் வங்கதேச தொடரில் முகமது ஷமி, தீபக் சஹார், குல்தீப் சென், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் என அடுத்தடுத்து காயத்தினால் வெளியேறி வருகின்றனர். இதனால் இந்திய அணியின் எதிர்காலம் என்னவென்று புரியாமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications