இந்திய அணியின் மருத்துவக் குழுவுக்கும், விவிஎஸ் லக்ஷ்மன் நடத்தும் சிறப்பு மையத்துக்கும் இடையே மோதல்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில், விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை ஏற்றுள்ள தேசிய சிறப்பு மையம் மற்றும் இந்திய அணியின் மருத்துவக் குழுவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய அணிக்கு என தனியாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், உடற்பயிற்சி நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவுக்கும், பிசிசிஐ-யின் கீழ் தனி அமைப்பாக இயங்கி வீரர்களின் பயிற்சி, காயத்தில் இருந்து மீண்டு வருதல் ஆகியவற்றை கவனித்து வரும் தேசிய சிறப்பு மையத்துக்கும் இடையே நேரடி மோதல் எழுந்துள்ளது.
இந்திய அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளர் ஏட்ரியன் லெ ரூக்ஸ், கடந்த 2025 ஜூன் மாதத்தில் வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க சில புதிய நடைமுறைகளைப் பரிந்துரைத்தார். ஆனால் பெங்களூரு மையம் தனது பழைய வழக்கமான முறைகளை மாற்ற மறுத்துவிட்டது. இரு தரப்பிற்கும் இடையே விவிஎஸ் லக்ஷ்மன் மட்டுமே ஒரே பாலமாகச் செயல்படுகிறார். அதேவேளையில் தலைமை மருத்துவ அதிகாரி பதவி கடந்த 2025 மார்ச் முதல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கும் விவிஎஸ் லக்ஷ்மனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய சூழலில், தற்போது பயிற்சியாளர்கள் இடையேயும் முட்டல் மோதல் தீவிரமடைந்துள்ளது. வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் கேப்டன் சுப்மன் கில் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருவதாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னரே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் 20 பேர் உள்பட மொத்தம் 32 முன்னணி வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மீண்டும் மீண்டும் காயமடைகின்றனர்.
பிசிசிஐ சிறப்பு மையத்தின் செலவு 92 கோடி ரூபாயில் இருந்து 127 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்ட போதிலும், அதிகாரிகளின் ஈகோ மற்றும் முறையான தகவல் தொடர்பு இல்லாததால் வீரர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

