தரம்சலாவுக்காக தயாராகி வந்த பாக். ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில்!
இஸ்லாமாபாத்: தரம்சலாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தற்போது பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் கொல்கத்தாவிற்குச் சென்று போட்டியைக் கண்டு ரசிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து தர வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தி நேஷன் இதழ் கோரியுள்ளது.
தர்மசலாவில் நடக்கும் போட்டியைக் காண்பதற்காக பாகிஸ்தான் ரசிகர்கள் ஏற்கனவே டிக்கெட் வாங்கி விட்டனர். ஹோட்டலில் தங்கவும் முன்பதிவு செய்து வைத்து விட்டனர். ஆனால் தற்போது போட்டியை கொல்கத்தாவுக்கு மாற்றி விட்டது ஐசிசி.
இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். அத்தனை ஏற்பாடுகளும் வீணாகியுள்ளதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்தான் உதவ வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தி நேஷன் இதழ் கோரிக்கை விடுத்துள்ளது.

தரம்சலா குழப்பம்
Dharamshala fiasco என்ற பெயரில் தி நேஷன் எழுதியுள்ள தலையங்கத்தில், உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தரம்சலாவில் நடக்கவிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண பெரும் ஆர்வமாக இருந்தனர்.

பாதுகாப்புத் தர முடியாத இ.பி.
ஆனால் இமாச்சலப் பிரதேச அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி விட்டதால் அந்தப் போட்டியை அங்கு நடத்த முடியாமல் போய் விட்டது. தற்போது கொல்கத்தாவுக்குப் போட்டி மாறியுள்ளது.

மாற்று ஏற்பாடு செய்யுங்கள்
தற்போது தரம்சலா போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கொல்கத்தாவுக்குப் போக வேண்டியுள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடமையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு கண்டனம்
இந்தத் தலையங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு தர முடியாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் கூறியதற்குப் பிறகும், மதச்சார்பற்றதாக தன்னைக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் அதில் தலையிடாமல் அமைதி காத்தது ஆச்சரியமாக இருப்பதாக அது கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications