ஆளுக்கு ஒரு பக்கமா போய் ஆடுங்கப்பா.. என்னாது?.. கொந்தளித்த இந்தியா.. ஜகா வாங்கிய ஐசிசி!
டெல்லி: டெஸ்ட் அணிகளை இரு பிரிவாகப் பிரிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் யோசனைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பயந்து போன ஐசிசி தற்போது அந்த யோசனையை தூக்கித் தூரப் போட்டு விட்டது.
சர்வதேசத்திற்கும் அமெரிக்கா பெரியண்ணனாக இருக்கலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாதான் ராஜா. இந்தியாவை மீறி ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு கிளவுஸைக் கூட கழற்ற முடியாது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் புதிய ஐடியா ஒன்றை தெரிவித்திருந்தது ஐசிசி. ஆனால் அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த ஐடியாவை அது தற்போது தூக்கிப் போட்டு விட்டது.

"சொங்கி" டெஸ்ட் !
இது டி20 காலம். இதனால் ரசிகர்களுக்கு எதிலுமே ஒரு விறுவிறுப்பு தேடுகிறது. டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் கூட அதிலும் அதிரடியை விரும்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிகளை விறுவிறுப்பாக ஒரு ஐடியா செய்தது ஐசிசி.

நீங்க ஒரு குரூப்.. நீங்க இன்னொரு குரூப்
அதன்படி தரவரிசைப்படி டெஸ்ட் ஆடும் அணிகளை இரண்டு பிரிவாகப் பிரிக்க ஐசிசி முடிவு செய்தது. அதன்படி தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள் ஒரு குழுவாக இருக்கும். மீதமுள்ள 5 அணிகள் இன்னொரு குழுவாக இருக்கும். இவற்றோடு அயர்லாந்து, ஆப்கானிஸ்தானையும் சேர்க்க ஐசிசி முடிவு செய்தது.

அவர்களுக்குள் மோதிக் கொள்ள வேண்டும்
இந்தக் குழுவில் இடம் பெறும் அணிகள் அந்தந்த குழுவில் உள்ள அணிகளோடு டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும். குரூப் மாறி வந்து ஆட முடியாது. அந்தந்த குரூப்களுக்குள்தான் ஆடிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்குப் பாதகம்
இந்த குழு பிரிவினையால் இந்தியாவுக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது தரிவரிசையில் அது இறங்கிப் போனால் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற தம்மாத்தூண்டு அணிகள் இடம் பெற்றுள்ள 2வது குழுவுக்குள் தள்ளப்படும் அபாயம் உண்டு. எனவே ஐசிசியின் இந்த திட்டத்தை இந்தியா விரும்பவில்லை.

நாட்டாமை தீர்ப்பை மாத்து
இதைத் தொடர்ந்து இந்த பரிந்துரைக்கு இந்தியா முறைப்படி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. கூடவே, இந்தியா என்ன செய்தாலும் ஆதரிக்கும் இலங்கையும், வங்கதேசம், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியங்களும் ஆட்சேபனையைப் பதிவு செய்தன.

ஓகே பாஸ் மாத்திட்டோம்!
இதைப் பார்த்த ஐசிசி தனது பரிந்துரையை துபாயில் நடந்த ஐசிசி செயற்குழுக் கூட்டத்தில் வைத்து விவாதித்து, இந்தியாவின் ஆட்சேபனையை ஏற்று பரிந்துரையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து ஜகா வாங்கித் தப்பியது!


Click it and Unblock the Notifications