வங்கதேச உடனான இந்திய அணி தொடர் எப்போது? தமீம் இக்பாலுக்கு பிசிசிஐ பதில்
மும்பை: 2026-27 ஆம் ஆண்டு கிரிக்கெட் சீசனில், ஆறு போட்டிகள் கொண்ட வெள்ளை-பந்து தொடருக்காக இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர், முதலில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிடப்பட்டது.
பின்னர் இது 2026 செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் BCB இடையே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இத்தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த BCB தலைவர் தமீம் இக்பால், இந்த சுற்றுப்பயணத்தை மீண்டும் திட்டமிட்டபடி நடத்துவதற்காக இரு வாரியங்களும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். "இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன என்பதை மட்டுமே என்னால் இப்போது கூற முடியும். இது ஒரு பயனுள்ள பேச்சுவார்த்தையாக உள்ளது, இந்தத் தொடர் நடக்கும் என்று நான் நம்புகிறேன்" என அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிசிசிஐ நிர்வாகிகள், "இந்தியா-வங்கதேசம் இடையிலான தொடர் ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருகின்றன, அதே நேரத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தொடருக்கான வாய்ப்பை பிசிபி எதிர்நோக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி முதலில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருந்தது, ஆனால் பின்னர் இத்தொடர் 2026 செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் பிசிபி வெளியிட்ட அறிவிப்பில், டாக்கா மற்றும் சட்டோகிராம் ஆகிய இடங்களில் இந்தியா மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஜனவரியில் பிசிபி இந்த சுற்றுப்பயணம் பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச ஆல்-ரவுண்டர் முஸ்டாபிசுர் ரஹ்மானை விடுவித்த பின்னர் இரு வாரியங்களுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. அமினுல் இஸ்லாம் தலைமையிலான பிசிபி, இந்தியாவுடன் இணைந்து நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கு வங்கதேச அணியை அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்ததும் இந்த நிலைமையைக் கூடுதல் சிக்கலாக்கியது.
இருப்பினும், தமீம் இக்பால் பிசிபி தலைவராக பொறுப்பேற்ற பிறகு இரு வாரியங்களுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்த தமீம் இக்பால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்திற்குச் சென்றார். இது இரு வாரியங்களுக்கு இடையே மீண்டும் சுமூகமான உறவு திரும்புவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

