பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மீதே வயது மோசடி சர்ச்சை.. உலகக்கோப்பை வென்ற கீர்த்தி ஆசாத் ஆவேசம்
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரான மிதுன் மன்ஹாஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் போது போலியான பிறந்தநாள் சான்றிதழ் கொடுத்து வயது மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத், இந்த விவகாரத்தில் பிசிசிஐ தனது சொந்த தலைவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் வீரரான மிதுன் மன்ஹாஸ், குறைந்த வயது உடையவர்களுக்கான கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி சலுகைகளைப் பெறுவதற்காக தனது பிறந்த தேதியை மாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் பிசிசிஐ அமைப்பில் ஒரு பிறந்த தேதியையும், டெல்லி கிரிக்கெட் அமைப்பில் மற்றொரு பிறந்த தேதியையும் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அது குறித்து வெளியான செய்தித்தாள் புகைப்படத்தை சுட்டிக்காட்டி கீர்த்தி ஆசாத் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்துவிட்டு பிசிசிஐ என்ன செய்கிறது என அவர் ஆவேசமாக சாடியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் இணை செயலாளரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான சுதர்ஷன் மேத்தா ஜம்மு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மன்ஹாஸ் போலியான ஆவணங்களை தயாரித்து ஏமாற்றியுள்ளதால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜம்மு நீதிமன்ற நீதிபதி சந்தீப் சிங் சென், உடனடியாக வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக, நவாபாத் காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர முதற்கட்ட விசாரணை நடத்தி வரும் செப்டம்பர் 3, 2026க்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வயது மோசடி செய்பவர்கள் மீது பிசிசிஐ கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வரும் நிலையில், பிசிசிஐ அமைப்பின் தலைவரே இத்தகைய முறைகேடு புகாரில் சிக்கி நீதிமன்ற விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
