மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, பிசிசிஐ துணைத் தலைவராக இருந்த மூத்த நிர்வாகி ராஜீவ் சுக்லா, இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ரோஜர் பின்னி, 2022 அக்டோபரில் சௌரவ் கங்குலிக்குப் பிறகு பிசிசிஐ தலைவராகப் பதவியேற்றார். கடந்த ஜூலை 19-ம் தேதி அவர் தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிசிசிஐயின் சட்ட விதிகளின்படி, 70 வயதை நிறைவடைந்த எந்தவொரு நிர்வாகியும் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஆவார். இந்த விதிமுறையின்படியே, பின்னி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 65 வயதான ராஜீவ் சுக்லா, புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020-ம் ஆண்டு முதல் பிசிசிஐ-யின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (AGM) வரை, இவர் அன்றாடப் பணிகளைக் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் ஒப்புதலுடன் புதிய முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தேசிய விளையாட்டு மசோதாவில், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பிசிசிஐ தனது சொந்த சட்டவிதிகளின்படியே இயங்குவதால், 70 வயது வரம்பு விதிமுறை தற்போதைக்கு மாற்றப்படவில்லை. இதுகுறித்து பிசிசிஐ-யின் சட்டக் குழு ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்துள்ள ரோஜர் பின்னி, 2000-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து உலகக் கோப்பையை வென்று தந்துள்ளார். மேலும், தேர்வாளராகவும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மூத்த நிர்வாகியான ராஜீவ் சுக்லாவின் தலைமையில், பிசிசிஐ அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.