மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, ஸ்ரேயாஸ் ஐயரின் வயிற்றில் ஏற்பட்ட 'பலத்த அடி' காரணமாக, அவரது மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு உண்டானது என அந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, ஹர்ஷித் ராணா ஓவரில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிவந்து கடினமான கேட்ச் ஆக மாற்ற டைவ் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அப்போது அவரது இடது பக்க விலா எலும்புப் பகுதியில் அடிபட்டது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய அவரது உடல்நிலை, ஓய்வறைக்குச் சென்ற பின்னர் மோசமடைந்தது. அவரது நாடித்துடிப்பு அபாயகரமான அளவுக்குக் குறைந்ததால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு உண்டானது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பிசிசிஐ வெளியிட்ட விரிவான அறிக்கையில், "அக்டோபர் 25 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, ஸ்ரேயாஸ் ஐயரின் வயிற்றில் பலத்த அடிபட்டது. இதன் விளைவாக, அவரது மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு உண்டானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "காயம் உடனடியாகக் கண்டறியப்பட்டு, இரத்தக் கசிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் குணமடைந்து வருகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பிசிசிஐ மருத்துவக் குழு ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின்படி, பிசிசிஐயின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் டின்ஷா பர்திவாலா, களத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டுச் சரியான சிகிச்சை அளித்ததால்தான் உயிருக்கு ஆபத்தான மோசமான சூழல் தவிர்க்கப்பட்டதாகப் பாராட்டியிருந்தார்.
தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் விரைவில் சிட்னிக்குச் செல்ல உள்ளனர். இந்தத் திடீர் மற்றும் தீவிரமான காயத்தால், அவர் சில மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.