மும்பை: இந்திய அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட 8 மாதங்களிலேயே அந்த பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் ட்ரெய்னர் சோஹம் ஆகியோரையும் வெளியில் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரெலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியவில்லை.

இருந்தாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தோல்விகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பயிற்சியாளர்கள் குழு மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ தயாராகி இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் கொண்டு வரப்பட்டார்.
அப்போது கம்பீர் தரப்பில் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல், துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், பிசிசிஐ உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிசிசிஐ தரப்பில் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் பயணித்து வரும் நிர்வாகிகளையும் வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் ட்ரெய்னர் சோஹம் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர்.
இதனால் புதிய ட்ரெய்னராக ஏட்ரியன் லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியுடன் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக கேகேஆர் அணியில் பணியாற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு பின் ஏட்ரியன் லி இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் இந்திய அணியுடன் தொடர உள்ளார். 8 மாதங்களிலேயே இந்திய துணைப் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயர் நீக்கப்படவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்திற்கு யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.