கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்துகபில்தேவ் நீக்கம்: பிசிசிஐ அதிரடி!
மும்பை:இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் லீக்கின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் கபில்தேவை, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா கேவலமாக வெளியேறியதால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திறமையான, தகுதி வாய்ந்த வீரர்களை தேர்வு செய்யத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
![]() |
இந்த நிலையில் ஜீ டிவி குழுமத் தலைவர் சுபாஷ் சந்திரா, இந்திய கிரிக்கெட் லீக் என்ற புதிய அமைப்பை அறிவித்தார். இந்த அமைப்பின் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் காட்டப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
ஆனால் இந்த அமைப்பு வாரியத்திற்கு எதிரானது, இதில் இந்திய வீரர்கள் யாரும் சேரக் கூடாது, சேரவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் லீக்கின் தலைவராக கபில் தேவ் அறிவிக்கப்பட்டார். இதனால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. கபில்தேவ் ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருந்து வரும் நிலையில், கிரிக்கெட் லீக் தலைவராக கபில்தேவ் செயல்படக் கூடாது. மீறி செயல்பட்டால் நீக்குவோம் என்று கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.
ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை கபில். முடிந்தால் நீக்கிப் பார் என்று வாரியத்திற்கு சவால் விடுத்தார். இந்த நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் லீக்கின் முதல் கட்ட வீரர்கள் பட்டியலை கபில் தேவ் மும்பையில் வெளியிட்டார். இதில் பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து வீர்ரகள் தவிர இந்தியாவின் பல ரஞ்சி வீரர்களும், முன்னாள் இந்திய அணி வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இந்திய கிரிக்கெட் லீக்கின் வேகம் கிரிக்கெட் வாரியத்தை பீதிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இன்று தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவை வாரியம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்திய கிரிக்கெட் லீக்கில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் மீதும் நடவடிக்கைக எடுக்க வாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் அந்த நடவடிக்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
