மும்பை : கிரிக்கெட் என்றால் உயிரையே விடும் பல ரசிகர்கள் உடைய நாடு தான் இந்தியா. ஆனால் இந்த ரசிகர்களை துச்சமாக கூட பிசிசிஐ நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் செய்து தரப்பட்ட நிலையில் இந்தியாவில் அப்படி ஒரு எந்த சம்பவமும் நடைபெறுவது இல்லை.

இந்த நிலையில் ஜெய்ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்து பல விவகாரங்களை குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக இதில் ரசிகர்களுக்கு பல அதிர்ச்சி சம்பவங்கள் காத்திருந்தது. காரணம் உலகக் கோப்பை போட்டி தொடருக்கான அட்டவணை மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிப்பது எதற்காக என்றால் ரசிகர்கள் அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு தங்களது பயணங்களை மேற்கொள்வதற்காக டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்வது ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக தான்.
அப்படி உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே செய்யப்பட்டு ரசிகர்களும் அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில், தற்போது பிசிசிஐ ஒரு பெரிய ஆப்பை வைத்திருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் அட்டவணையில் புதிய தேதி இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தி வரும் நிலையில் பிசிசிஐ தற்போது டிஜிட்டல் டிக்கெட்டுக்கு தடை விதித்துள்ளது.
டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்றாலும் உண்மையான டிக்கெட்டுகள் கவுண்டரில் தான் கொடுக்கப்படும் என ஜெய்ஷா தற்போது கூறி இருக்கிறார். அதன்படி போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஒரு நகரின் ஏழு இடங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுமாம். ஆன்லைனில் புக்கிங் செய்து ரசிகர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்து அனுமதி சீட்டை நேரில் தான் வந்து பெற வேண்டுமாம். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியா பாகிஸ்தான் போட்டியை வெளிநாட்டிலிருந்து பார்க்க வரும் நபர் ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியா வந்து அந்த டிக்கெட்டை நேரில் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு காரணத்தைக் கூறும் ஜெய்ஷா இவ்வளவு பெரிய மைதானங்களில் ஆன் லைன் டிக்கெட்டுகளை வைத்து ரசிகர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். மேலும் ரசிகர்கள் குடிநீர் பாட்டில்களை எடுத்து வர ஏற்கனவே தடை உள்ள நிலையில் அந்த தடை உலகக் கோப்பை தொடரிலும் தொடருமாம்.
ஆனால் அதற்கு பதிலாக இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் ஜெய்ஷா உறுதியளித்துள்ளார். ஜெய்ஷாவின் இந்த அறிவிப்பு இனி எதற்கு கிரிக்கெட் போட்டிகளை நேரில் வந்து பார்க்கிறீர்கள்? வீட்டிலே உட்கார்ந்து பாருங்கள் என்று சொல்லாமல் சொல்வது போல் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.