என்னதான் கிரிக்கெட்டில் நீங்க புலியா இருந்தாலும் இந்தி தெரியாட்டி இந்த வேலை கிடைக்காது!
டெல்லி: "இந்தி" பேசக் கூடிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அதுதொடர்பாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த டங்கன் பிளட்சர் செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் புதிய பயிற்சியாளரை இதுவரை நியமிக்காமல் உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அதற்குப் பதில் இயக்குநர் என்ற புதிய பதவியை உருவாக்கி ரவி சாஸ்திரியை இயக்குநராக நியமித்து காலத்தைக் கழித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தி தெரிய வேண்டும்
9 முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு தலைமைப் பயிற்சியாளப் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபருக்கு இந்தி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டுமாம்.

ஜூன் 10 கடைசி நாள்
புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐயின் புதிய தலைவரா அனுராக் தாக்கூர் மே 22ம் தேதி கூறியிருந்தார். தற்போது அதுதொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

ஆங்கிலம் மட்டும் போதாது
இந்த விளம்பரத்தின் 6வது அம்சம் என்ன சொல்கிறது என்றால், சர்வதேச அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் என்பதால் ஆங்கிலத்தில் நல்ல தகவல் தொடர்பு திறமை உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அதேசமயம், இந்தி மற்றும் பிற இந்திய பிராந்திய மொழிகளில் புலமை பெற்றவர்களாக இருப்பது விருப்பத்துக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி தெரிந்தவர்களுக்கே வாய்ப்பு அதிகம்!
இந்தி என்று மட்டும் குறிப்பிட்டால் மொழி வெறியை பிசிசிஐ காட்டுகிறது என்று கூறி விடுவார்கள் என்பதால் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் என்று பாதுகாப்பாக வார்த்தைகளை கோர்த்துப் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய மொழிகள் எனறு பொதுவாக போடாமல் இந்தி மற்றும் என்று போட்டிருப்பதன் மூலம் அவர்கள் இந்தி தெரிந்தவர்களையே முக்கியமாக விரும்புவதாகவும் உணர முடிகிறது.

அனுபவம் இருக்க வேண்டும்
ஐசிசியின் உறுப்பு நாடு அணிகள் ஏதாவது ஒன்றுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் உடையவர்களுக்கும், முதல் தர மற்றும் சர்வதேச அளவிலான அணிகளுக்குப் பயிற்சி அளித்தவர்களாக இருந்தாலும் அதுவும் விரும்பப்படுமாம்.

ரவி சாஸ்திரி
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்தியை நன்றாக கரைத்துக் குடித்துக் கலக்கியவரான ரவி சாஸ்திரி விண்ணப்பிக்கவுள்ளார். இவர் டி20 உலகப் போட்டி வரை இந்திய அணியின் இயக்குநராக இருந்தவர் என்பது நினைவிருக்கலாம். இவருக்கு ஆதரவாக பிசிசிஐயில் வலுவான லாபி இருப்பதால் நிச்சயம் சாஸ்திரிக்கே பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் பாங்கர்- பரத் அருண்
மேலும் சஞ்சய் பாங்கர், பரத் அருண் போன்றோர் பிற பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் சாஸ்திரி தலைமையிலான அணியில் உதவிப் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர்கள் ஆவர்.


Click it and Unblock the Notifications