ஐபிஎல் தொடருக்கு ஆபத்து.. உரிமையாளர்களால் ஏற்படப்போகும் பெரும் நஷ்டம்.. பிசிசிஐ அவசர ஆலோசனை!
கொச்சி: ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்துக்கொண்ட 10 அணிகளுக்கும் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. காலியாக இருந்த 87 இடங்களுக்கு மொத்தம் 80 வீரர்களை தேர்வு செய்துள்ளனர். 7 இடங்கள் காலியாகவே உள்ளன.
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள், போட்டிகள் அதிகரிப்பு, தொகை அதிகரிப்பு என செய்து வருவதால் உலகளவில் அதன் மதிப்பு ஏக போகத்திற்கு எகிறியுள்ளது. எனினும் அதற்கு கலங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தற்போது பிசிசிஐ உள்ளது.

ஐபிஎல் தொடருக்கு ஆபத்து
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் வெற்றியை பார்த்து பல்வேறு நாடுகளிலும் உள்நாட்டு தொடர்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அந்த தொடர்களிலும், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே முதலீடு செய்கின்றனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் உள்ள 6 அணிகளுமே ஐபிஎல் உரிமையாளர்களுடையது தான். அமீரக டி10 தொடரில் உள்ள 3 அணிகள் மற்றும் கரீபியன் டி20 தொடரில் 2 அணிகள் என ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்காவிலும் முதலீடு செய்யப்போவதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

என்ன காரணம்
இந்திய தொழிலதிபர்கள் அயல்நாடுகளில் முதலீடு செய்வதால் ஐபிஎல்-ன் மதிப்பு சரிவதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகளில் மட்டும் ஆண்டுக்கு ரூ.9000 கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிகிறது. இதே போல அதிக தொகைகளை அயல்நாட்டு தொடர்களில் முதலீடு செய்தால், ஐபிஎல்-க்கான மவுசு குறைந்துவிடும் என பிசிசிஐ பதற்றத்தில் இருக்கிறது.

அவசர ஆலோசனை
இந்நிலையில் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மினி ஏலத்திற்காக சென்ற உரிமையாளர்களுக்கு தனியாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சொந்த நாட்டு தொடரின் மதிப்பு முக்கியம். நாம் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மற்ற மார்கெட்களை ஜொலிக்க வைத்தால் நமது மார்க்கெட் படுத்துவிடும், எனவே அதை குறைத்துக்கொள்ளுங்கள் என்பது போல மறைமுகமாக கூறியுள்ளது. இதனை சில அணி உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ-ன் விளக்கம்
எனினும் இது எதுவுமே நடக்காதது போல பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், மற்ற நாட்டு வாரியங்களுக்கும், டி20 தொடரை உருவாக்க உரிமைகள் உண்டு. அதில் முதலீடு செய்யவும் இந்திய முதலாளிகள் விரும்புகின்றனர். அவர்களின் தொழிலை நாங்கள் செய்ய வேண்டாம் எனக்கூறவே இல்லை. பணம் இருப்பவர்கள் செய்கிறார்கள், அவ்வளவேதான். மற்ற தொடர்களை விட, ஐபிஎல் நீண்ட தூரத்தில் இருக்கிறது. இதனால் கவலையே இல்லை என பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications