அடுத்தடுத்து காயமடையும் இந்திய வீரர்கள்.. தலைமை பிசியோதெரபிஸ்ட் அதிரடி நீக்கம்.. பிசிசிஐ ஆக்ஷன்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் காயமடைந்து வரும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினின் ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிரடியாக ரத்து செய்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நிதின் படேலுக்குப் பதிலாக இந்திய அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட்டாக கமலேஷ் ஜெயின் பொறுப்பேற்றார். ஆனால் சமீபகாலமாக, வீரர்கள் அடிக்கடி தசைப்பிடிப்பு மற்றும் தொடர் காயங்களால் அவதிப்படுவதும், காயத்திலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுத்துக்கொள்வதும் அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களின் போது நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். வீரர்களின் உடற்தகுதியை முறையாகப் பராமரிக்கத் தவறியது மற்றும் அடிக்கடி ஏற்படும் காயங்களைத் தடுக்க முடியாதது குறித்து கமலேஷ் ஜெயினிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோட்டீஸ் காலத்தில் இருக்கும் கமலேஷ் ஜெயினுக்குப் பதிலாக, புதிய தலைமை பிசியோதெரபிஸ்ட்டை விரைவில் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இலங்கை டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 51.52 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
வரும் செப்டம்பர் 13 முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் வரவுள்ள நிலையில், மருத்துவக் குழுவின் முக்கிய நபர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
தற்போது புதிய பிசியோதெரபிஸ்ட்டை எப்போது பிசிசிஐ தேர்வு செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நீண்ட டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதற்கு முன்னதாக பிசிசிஐ தேர்வு செய்தாக வேண்டிய அவசியம் உள்ளது.


Click it and Unblock the Notifications

