காஷ்மீரை அவங்க பிரிச்சாலும்.. 2 துண்டா வெட்டினாலும்.. நாங்க பிரிக்கப் போறதில்லை.. அடடே முடிவு!
மும்பை : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ள நிலையில், அந்த மாநில கிரிக்கெட் அணியின் நிலை என்ன ஆகும் என்பது குறித்து பிசிசிஐ "அடடே" அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காஷ்மீரை இரண்டாக பிரித்ததில் பலருக்கும் பல கவலைகள் இருக்கும் நிலையில், பிசிசிஐக்கு ஜம்மு - காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியை காஷ்மீர் அணி, லடாக் அணி என எப்படி பிரிப்பது என்பது குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
அடுத்து ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி குறித்து பேசி முடிவை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இரண்டு யூனியன் பிரதேசங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலமாக இருந்த போது, ஜம்மு காஷ்மீர் மாநில அணி ரஞ்சி ட்ராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தது.

ஒரே அணி தான்
இந்த நிலையில், மாநிலம் பிரிக்கப்பட்டாலும் லடாக் பகுதி வீரர்களும் ஜம்மு காஷ்மீர் மாநில அணியிலேயே விளையாடலாம் என அறிவித்துள்ளது பிசிசிஐ. இரண்டு அணிகளாக இப்போதைக்கு பிரிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

லடாக் வீரர்?
இதில் ஒரு வேடிக்கையும் உள்ளது. மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போதும் ஒரு லடாக் பகுதி வீரர் கூட அந்த மாநில கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த "அடடே" முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

ஓட்டு உரிமை
மேலும், லடாக் அல்லது ஜம்மு காஷ்மீர் அணிக்கு பிசிசிஐயில் ஓட்டு உரிமை கிடைக்குமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. காரணம், மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டுமே யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது என்பது தான்.

சண்டிகர் நிலைமை
சண்டிகர் யூனியன் பிரதேசம் என்றாலும் அந்த பகுதி வீரர்கள் ஹரியானா அல்லது பஞ்சாப் மாநில அணியில் விளையாட அனுமதிக்கப்படுகிறது. அதே போன்ற நிலை தான் லடாக் பகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு வீரராவது அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் அணியில் இடம் பெறுவாரா? என்பதே சந்தேகம் தான்.


Click it and Unblock the Notifications