மும்பை: கடந்த சில வாரங்களாக இந்திய கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வந்த வங்கதேச வீரர் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை நீக்கியது.
இதுகுறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, இந்தத் தகவலை முதலில் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "தற்போது நிலவும் சூழல் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளோம். அதன்படி, அவர்கள் அணியில் ஒப்பந்தம் செய்துள்ள வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளோம்.

மேலும், முஸ்தஃபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதால் ஏற்படும் இடத்திற்கு, வேறொரு மாற்று வீரரைத் தேர்வு செய்துகொள்ளவும் கொல்கத்தா அணிக்கு அனுமதி அளிக்கப்படும்" என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிசிசிஐ உத்தரவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அமல்படுத்தியது.
என்ன சிக்கல்?
ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறையைக் காரணம் காட்டி, பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஷாருக்கான் கொல்கத்தாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்பது வரை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாகவே பிசிசிஐ தற்போது இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
பிசிசிஐ-யின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் முஸ்தஃபிசுரை விடுவித்து இருக்கிறது. அவருக்குப் பதிலாக எந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை அணியில் இணைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நீக்கத்தின் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.