மக்களே காசு விஷயத்தில் உஷார்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கொரோனா.. பிசிசிஐ-க்கே இதுதான் நிலைமை!
மும்பை : கோடிக்கணக்கில் பணத்தை வைத்திருக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Recommended Video
கங்குலி தலைவர் பதவிக்கு வந்த உடனேயே இந்த நடவடிக்கைகளை எடுக்க நினைத்து இருந்தால் அப்போதே எடுத்திருக்கலாம்.
ஆனால், கொரோனா வைரஸ் உலகை தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவசர, அவசரமாக சிக்கனத்தை கடைபிடிக்கத் துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ்
2௦20ஐ இரு கரத்தால் தழுவி வரவேற்ற கொரோனா வைரஸ், ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து, சீனா முதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவும் விதிவிலக்கல்ல. உலகம் முழுவதும் பல தொழில்களும் பாதிப்படைந்து உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை லேசாக பாதிக்கத் துவங்கி உள்ளது.

கிரிக்கெட்டுக்கு பாதிப்பு
ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரே இடத்தில் கூடச் செய்யும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டன.

ஐபிஎல் தள்ளி வைப்பு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஐபிஎல் தொடர் கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல் தொடர், தற்போது ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது நடக்கும்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நடக்க வாய்ப்பு குறைவு
ஏப்ரல் 15க்குள் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்து, உலகம் இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே ஐபிஎல் தொடரை பற்றி சிந்திக்க முடியும். மக்கள் கொரோனா பரவும் நேரத்தில் ஐபிஎல் அவசியமா? என கேட்டு வருவதால், இந்த நேரத்தில் ஐபிஎல்-ஐ நடத்த முடியாது.

பரிசு குறைப்பு
ஐபிஎல் தொடர் தடையால் பல கோடிகளை இழந்துள்ள பிசிசிஐ, உஷாராக கொரோனா பற்றிய பேச்சு எழும் முன்பே, ஐபிஎல் தொடரின் பரிசுப் பணத்தை பாதியாக குறைத்து விட்டது. 50 கோடி அளவுக்கு இருந்த பரிசுப் பணத்தை 25 கோடியாக குறைத்தது.

சிக்கன நடவடிக்கை
அடுத்து சிக்கன நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்திய அணி தேர்வுக் குழு மற்றும் ஜூனியர் அணி தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிசினஸ் கிளாஸ் விமான பயண சலுகையை, எகானமி பிரிவு விமான பயணமாக மாற்றி உள்ளது. தேர்வுக் குழு தலைவர் மட்டுமே பிசினஸ் கிளாஸில் பயணம் செய்யலாம்.

முன்பு இருந்த நிலை
இதற்கு முன்பு, இந்திய அணி தேர்வுக் குழுவில் தலைவர் தவிர்த்து பதவியில் இருந்த நால்வரும், அதே போல, ஜூனியர் அணி தேர்வுக் குழு உறுப்பினர்களும் பிசினஸ் கிளாஸில் பயணித்து வந்தனர். ஒவ்வொரு தொடருக்கும் பல முறை அவர்கள் பயணம் செய்வதால் மொத்தமாக ஆண்டு முடிவில் கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை மாற்றி உள்ளது.

கொரோனா பீதி தான் காரணம்?
இந்த நடவடிக்கைகளை கங்குலி தலைவர் பதவிக்கு வந்த இத்தனை மாதங்களில் செய்யவில்லை. ஆனால், சரியாக கொரோனா தாக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிசிசிஐ செய்துள்ளது. அதே போல பரிசுப் பணத்தை குறைத்ததும், ஐபிஎல் தொடர் பாதிக்கப்படலாம் என்பதால் இருக்கலாம் என கருதப்படுகிறது.

விரலை விட்டு ஆட்டுகிறது
கொரோனா பிசிசிஐ கண்ணிலும் விரலை விட்டு ஆட்டி உள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்புக்கும் நஷ்டத்தால் ஏற்படும் பயத்தை கொரோனா காட்டி உள்ளது. பிசிசிஐ இன்னும் நிறைய சிக்கன நடவடிக்கைகளை எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

மக்களே உஷார்!
பெரிய அமைப்புக்கு நஷ்டம் குறித்த அபாயம் என்றால், சாமானிய மக்களுக்கு கையில் இருக்கும் சேமிப்பு கரைந்து விடும் அபாயம் உள்ளது. கொரோனாவால் பொருளாதாரம் பாதித்து வரும் இந்த நேரத்தில் உஷாராக பணத்தை சேமித்து, சிக்கனமாக செலவு செய்யுங்க மக்களே!


Click it and Unblock the Notifications