வைபவ் சூர்யவன்ஷியை எப்போதான் அறிமுகம் செய்வீர்கள்? பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு தள்ளிப்போவது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
அயர்லாந்து தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் அமரவைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசிய ராஜீவ் சுக்லா, "வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகச்சிறந்த திறமைசாலி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை அவர் ஐபிஎல் தொடரிலும் நிரூபித்துள்ளார். ஆனால், பிளேயிங் லெவன் குறித்து கேப்டனும், பயிற்சியாளரும் மட்டுமே இறுதி முடிவெடுப்பார்கள். மைதானத்தின் சூழல் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சரியான நேரம் வரும்போது அவருக்கு நிச்சயம் அறிமுக வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறினார்.

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி, 237.30 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஆனால், உலகக் கோப்பையை வென்ற இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய டாப்-3 வீரர்களைக் கொண்ட தற்போதைய பேட்டிங் வரிசையை மாற்ற அணி நிர்வாகம் விரும்பவில்லை.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகக் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாகத் திரும்பியதும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய ராஜீவ் சுக்லா, "அணி நிர்வாகத்தின் முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் அணியின் நன்மைக்காகவே முடிவெடுக்கிறார்கள். எனவே, இது போன்ற தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது" என்று கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
