துபாய்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்திற்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் அனல் பறக்கும். போட்டி பரபரப்பு ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருமானப் பகிர்வில் இரு நாட்டு வாரியங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது என்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.
உலக கிரிக்கெட்டின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பெரும் வருமானத்தைப் பெறுகிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மிகச் சிறிய பங்கையே பெறுகிறது.

ஐசிசியின் 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு கால வருவாய் பகிர்வுத் திட்டத்தின்படி, பிசிசிஐ-க்கு சுமார் 2,079 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க உள்ளது. இது ஐசிசியின் மொத்த வருவாயில் 38.50 சதவீதமாகும்.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) வெறும் 310 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது ஐசிசி வருவாயில் 5.75 சதவீதம் மட்டுமே. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பெறும் மொத்த வருமானத்தை விட இது அதிகம் என்பதுதான் உச்சக்கட்ட ஆச்சரியம்.
இந்த மிகப்பெரிய வித்தியாசத்திற்குக் காரணம், உலக கிரிக்கெட்டின் மொத்த வருவாயில் 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியா மூலமாகவே கிடைப்பதாகும். இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் பெரும் ரசிகர் பட்டாளம், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை பிசிசிஐயை உலகின் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக மாற்றியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு போட்டியின் வணிக மதிப்பு மட்டும் சுமார் 1,800 கோடி முதல் 2,200 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு போட்டியின் மூலம் ஐசிசிக்குக் கிடைக்கும் வருமானம் மிக அதிகம். இதில் இரு அணிகளுக்கும் பலன் கிடைத்தாலும், ஒட்டுமொத்த வருவாய் பங்கீட்டில் பிசிசிஐயின் கைதான் ஓங்கியுள்ளது.
வருமானத்தில் மட்டுமல்ல, சமீபகாலமாக மைதானத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளும் மோதிய 16 போட்டிகளில் இந்தியா 13ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவை டி20 போட்டியில் வென்றது. சமீபத்தில் நடந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை மூன்று போட்டிகளில் இந்திய டி20 அணி வீழ்த்தி இருந்தது.
கடந்த 2024 டி20 உலகக்கோப்பையில் கூட, இந்தியா நிர்ணயித்த 119 ரன்கள் என்ற குறைந்த இலக்கை பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை. அந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அந்த ஆதிக்கத்தைத் தொடரும் முனைப்பிலேயே இந்திய அணி இன்றைய போட்டியிலும் களமிறங்குகிறது.