தமிழக அதிரடி ஆல்ரவுண்டரை கண்டு கொள்ளாத பிசிசிஐ.. ஹர்திக்கிற்கு சரியான தேர்வாக இருந்திருப்பார்
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் கோப்பையை கைப்பற்ற இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனும் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகி விட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இது தவறான முடிவு என்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தமிழக ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இருந்த நிலையில் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிலையில் அந்த இடத்திற்கு தமிழக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தான் விளையாட வந்தார். இந்த நிலையில் வெங்கடேஸ் ஐயரும் காயம் காரணமாக தன்னுடைய இடத்தை அணியில் இருந்து இழந்தார். எனினும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மீட்ட வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் குவித்தார்.
இதில் ஒரு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் சையது முஸ்தாக் அலி தொடரிலும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 43, 29 ,35 ஆகிய ஸ்கோர்களை அடித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக அவர் செயல்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா இல்லை என்றால் அவருக்கு மாற்றாக இருக்கும் வெங்கடேஸ் ஐயரை தேர்வு செய்யாமல் வேதபந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் வெங்கடேஷ் ஐயர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர் அணியின் பேலன்ஸ்க்கு கச்சிதமாக பொருந்தி இருப்பார் என்றும் அவர் மூலம் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை கூட ரோகித் சர்மா பயன்படுத்தலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் விளையாடக் கிடைத்த வாய்ப்பு தற்போது வெங்கடேஷ் ஐயருக்கு வீணாகிவிட்டது. எனினும் ஹர்திக் பாண்டியா இல்லாததால் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் வெங்கடேஷ் ஐயர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications