ஒரு ஓரமா நடத்திக்கிறட்டுமா.. பெர்மிஷன் கொடுங்களேன்.. அரசிடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ
டெல்லி: ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பான அனுமதியை மத்திய அரசிடம் வைக்கவுள்ளது பிசிசிஐ.
Recommended Video
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டியை மாற்றி விட்டனர். இதனால் அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் போட்டி நடக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அப்படி நடக்காமல் போனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க வாய்ப்புள்ளதாம்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசிடம் அனுமதி கோர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், செப்டம்பர் மாதம் வரை நிலைமையை உன்னிப்பாக கவனிப்போம். அதன் பின்னர் இந்தியா அல்லது எமிரேட்ஸில் போட்டியை நடத்துவது தொடர்பான அனுமதியை மத்திய அரசிடம் கேட்போம் என்றார்.
இந்த வருடம் மார்ச் 29ம் தேதியே ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கிடையே போட்டி குறித்து திட்டமிடுவதற்காக அடுத்த 10 நாட்களுக்குள் கூட்டம் கூட்டப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதை ஒத்திவைத்து விட்டனர். எனவே அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
இதற்கு முன்பு ஒருமுறை இந்தியாவில் பொதுத் தேர்தல் வந்த காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம். தற்போதும் அதே பாணியில் இந்தியாவுக்கு வெளியே போட்டிகளை நடத்த அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications