பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு விசாரணை....இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாது
Recommended Video

லார்ட்ஸ் 2வது டெஸ்ட்..இங்கிலாந்து அணி அறிவிப்பு..ஸ்டோக்ஸ் இல்லை- வீடியோ
பிர்மிங்க்ஹாம் : பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறமாட்டார் என கூறப்பட்டது. தற்போது அதன் பின்னணி என்ன என வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் மீது உள்ள வழக்கு விசாரணை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, பென் ஸ்டோக்ஸின் துணை கேப்டன் பதவியை பறித்தது. மேலும், அவருக்கு அணியில் சிறிது காலம் வாய்ப்பளிக்காமல் இருந்தது. குறிப்பாக 2௦17-18 ஆஷஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-4 என்ற நிலையில் படு தோல்வி அடைந்தது.
ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என அவர் உறுதியாக தெரிவித்ததாலும் அவரை மீண்டும் அணியில் சேர்த்தது, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஆடினார் ஸ்டோக்ஸ்.
அதே போல இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் 316 ரன்கள் மற்றும் 12 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தற்போது ஸ்டோக்ஸ் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் அவருக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டோக்ஸ் மீதான விசாரணை ஐந்து அல்லது ஆறு நாட்கள் நடக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை, பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக இந்த வழக்கு சென்றால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனிக்க உள்ளார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாகவே கருத்துக்கள் கூறியிருந்தார்.
பென் ஸ்டோக்ஸ் நல்லபடியாக கிரிக்கெட்டுக்கு திரும்புவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Story first published: Monday, August 6, 2018, 16:46 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications