சொந்த அணி வீரர்களிடமே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.. ஜோ ரூட் குறித்து உருக்கம்
லண்டன்: நைட் கிளப் சர்ச்சையில் சிக்கி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் அணிக்குத் திரும்பியவுடன் தனது சக வீரர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, அணியின் கட்டுப்பாடுகளை மீறி நைட் கிளப் சென்று மோதலில் ஈடுபட்ட காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஸ்டோக்ஸ் இல்லாததால் ஜோ ரூட் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இப்போட்டியில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து, தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மேலும், கேப்டன் ஜோ ரூட் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டோக்ஸ், தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் பேசுகையில், "ஒரு கேப்டனாக நான் செய்ய வேண்டிய முதல் வேலை வீரர்களிடம் மன்னிப்பு கேட்பது தான். எனது இந்த செயல் என்னைத் தாண்டி ஜோ ரூட், அறிமுக வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியையும் பாதித்துள்ளது. ஒரு கேப்டனாக இந்த தவறுக்கு நான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஜோ ரூட்டை எல்லாரும் விமர்சித்தது எனது மனதை மிகவும் காயப்படுத்தியது. அவர் அணியை முன்னிறுத்தி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்" என்று கூறினார்.
மேலும், "என்னுடைய முழு கவனமும் தற்போது டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் மீது தான் உள்ளது. நானும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமும் இங்கிலாந்து அணியின் பொறுப்பை ஏற்ற பிறகு, நாங்கள் சந்திக்கும் மிகக் கடுமையான அழுத்தம் இதுவாகும். ஆனால், ஒரு சிறந்த தலைவராக இதிலிருந்து மீண்டு வருவதே முக்கியம்" என்றார். தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஸ்டோக்ஸ் அணிக்குள் இருக்கும் நம்பிக்கையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
