யப்பா சாமி முடியலை.. மேட்ச்சா இது.. சிகரெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடிய உலகக்கோப்பை நாயகன்!
லண்டன் : 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்ற ஒரு கிரிக்கெட் போட்டியை இதற்கு முன் யாருமே பார்த்திருக்க முடியாது.
Recommended Video
அதுதான் இறுதிப் போட்டிக்கெல்லாம் இறுதிப் போட்டி என கருதப்படுகிறது. அந்தப் போட்டியின் நாயகன் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தான். அதில் சந்தேகமே இல்லை.
முதலில் நடந்த 50 ஓவர் போட்டியில் அவர் கடைசி வரை களத்தில் நின்று 84 ரன்கள் அடித்து, பின் சூப்பர் ஓவரில் 8 ரன் எடுத்து இருந்தார்.

இறுதிப் போட்டி
2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் சேஸிங்கும் கடுமையாக இருந்தது.

ஸ்டோக்ஸ் ஆட்டம்
இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. கடைசி 5 ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே சேஸிங்கை ஒற்றை ஆளாக வழிநடத்த வேண்டி வந்தது. சமாளித்து ஆடிய ஸ்டோக்ஸ் போட்டியை டை செய்தார்.

சூப்பர் ஓவரும் டை
அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 15 ரன்கள் எடுத்தது. அதில் ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்து இருந்தார். சூப்பர் ஓவரும் டை ஆனதை அடுத்து போட்டியில் எந்த அணி அதிக பவுண்டரி அடித்தது என கணக்கிடப்பட்டது.

இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை விட அதிக பவுண்டரி அடித்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸ் தான் என அப்போது ஒட்டுமொத்த இங்கிலாந்தும் கொண்டாடித் தீர்த்தது.

புத்தகம்
பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். அந்த இறுதிப் போட்டியில் நடந்த சம்பவங்களை தொகுத்து "மார்கன்'ஸ் மென்" என்ற புத்தகம் வெளியாக உள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் குறித்த சம்பவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது
50 ஓவர்கள் ஆட்டம் டை ஆன பின் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. 27,000 ரசிகர்கள் நிரம்பி இருந்த மைதானத்தில் இருந்து, டிவி கேமராக்கள் பின் தொடர உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார் பென் ஸ்டோக்ஸ். அங்கேயும் பரபரப்பு நிலவியது.

இயான் மார்கன் திட்டம்
இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் வீரர்களை அமைதிப்படுத்தி என்ன செய்யலாம், எப்படி நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தலாம் என பேசி வந்தார். அவர்களையும் தாண்டி வேகமாக சென்றார் பென் ஸ்டோக்ஸ்.

சிகரெட்
உடல் முழுக்க வியர்வையுடன் சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் பேட்டிங் செய்து இருந்த அவர் நம்ப முடியாத பதற்றத்தில் இருந்தார். அங்கே குளியல் அறைக்குள் சென்ற அவர் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

ஆட்டநாயகன்
இவ்வாறாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் அன்று உச்சகட்ட பதற்றத்தில் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. பென் ஸ்டோக்ஸ் அந்தப் போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications