இப்படியும் ஒரு ரசிகையா.. பென் ஸ்டோக்ஸை வெட்கப்பட வைத்த பெண்.. அதுவும் அருகில் காதலன் இருக்கும் போதே
வெல்லிங்டன்: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பெண் ரசிகை ஒருவர் பென் ஸ்டோக்ஸுக்காக எழுதியிருந்த பதாகையை பார்த்து அரங்கமே வெட்கத்தில் மூழ்கியிருந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி கண்ட சூழலில் 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் நடந்து வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

ஸ்கோர் நிலவரம்
இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலேயே 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தடுமாறியது. இதன் பின்னர் ஃபாலோ ஆன் முறையில் மீண்டும் ஆடிய அந்த அணி 483 ரன்களை அடித்துவிட்டு ஆல் அவுட்டானது. இதனால் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

ரசிகையின் செயல்
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து ரசிகை ஒருவர் செய்த விஷயம் தான் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த நேரத்தில் பெண் ரசிகை பதாகை ஒன்றை கையில் வைத்துக்கொண்டு உற்சாகமாக காட்டினார். அதில், "பென் ஸ்டோக்ஸ், எனது காதலன் கிரிக்கெட்டை பார்க்க வந்துள்ளார். ஆனால் நான் உன்னை பார்க்க தான் வந்துள்ளேன்" என எழுதியிருந்தார்.

ரசிகர்களின் பதிவு
சிறிது நேரம் மைதானத்தில் இருந்த திரைகளில் அந்த பெண்ணின் பதாகை தான் காட்டப்பட்டு வந்தது. அதனை பார்த்த பென் ஸ்டோக்ஸ் வெட்கத்தில் சிரிக்க, சக வீரர்களும் கிண்டல் செய்து சிரித்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காதலனை அருகில் வைத்துக்கொண்டு, ஸ்டோக்ஸை பார்த்து வந்த அந்த ரசிகை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார்.

பென் ஸ்டோக்ஸ் சிறப்பு
இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் , பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலத்துடன் சேர்ந்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணுகுமுறையையே மாற்றிவிட்டார். பேஸ்பால் என்ற அந்த அணுகுமுறையானது எந்தவித இரக்கமும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டுவதாகும். இது பல முறை வெற்றிகளை தேடித்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications