
6 பந்துகளில் 19
2016ல் இந்தியாவில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்து வெளியேறிய, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில், இங்கிலாந்து நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது, 6 பந்துகளில் 19 ரன்கள்.

நான்கு சிக்ஸர்கள்
கடைசி ஓவரை இங்கிலாந்து ஆள் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீச, அதனை வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கார்லஸ் பிரத்வெயிட் சந்தித்தார். முதல் நான்கு பந்தின் ரிசல்ட் என்ன தெரியுமா? 6, 6, 6, 6. ஆம்! முதல் நான்கு பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைகளில் ஏந்தச் செய்தார். ஆனால், ஸ்டோக்ஸ் வாழ்வில் அது மறக்க முடியாத கரும்புள்ளியாக மாறிப் போனது. அதுவும் வீசிய முதல் நான்கு பந்துகளும் சிக்ஸருக்கு பிறந்ததால் அவரால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படியே மைதானத்தில் அமர்ந்து கண் கலங்கிவிட்டார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது T20 Blast 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தனது 5 ஆண்டு வலிக்கும், வேதனைக்கும் ஓரளவு மருந்து போட்டிருக்கிறார் ஸ்டோக்ஸ். இத்தொடரில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், Warwickshire மற்றும் Durham அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய Durham அணியில் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஸ்டோக்ஸ், Warwickshire அணியில் இடம் பெற்றிருந்த பிரத்வெயிட் ஓவரை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் சந்திக்கும் சூழல். இம்முறை ரிவர்ஸாக. அதாவது, ஸ்டோக்ஸ் பேட்டிங் பண்ண, பிரத்வெயிட் பந்துவீசுகிறார். என்ன நடந்திருக்கும்?

வாழ்க்கை ஒரு வட்டம்
6,6,4,4... பிரத்வெயிட் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். ஏறக்குறைய, இறுதிப் போட்டிக்கான ஒரு சரியான பழிக்குப்பழியாக அமைந்தது இப்போட்டி. ஆனால், விதியை பாருங்க. அதே பிரத்வெயிட் ஓவரில் தான் ஸ்டோக்ஸ் அவுட்டானார். எனினும், ஸ்டோக்ஸ் அணி இறுதியில் வெற்றிப் பெற்றுவிட்டது. "வாழ்க்கை ஒரு வட்டம்" என்ற டயலாக் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications