புவனேஷ்வர் குமார், வைபவ் சூர்யவன்ஷி அவுட்.. 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன?
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து புவனேஷ்வர் குமார் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இஷான் கிஷன் மற்றும் மயங்க் யாதவ் இருவரும் இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. முதல் போட்டியில் சஞ்சு சாம்சனும், 2வது போட்டியிலும் திலக் வர்மாவும் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் 3வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால், டி20 தொடரரை கைப்பற்ற முடியும். இதனால் நியூசிலாந்து அணி வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2வது டி20 போட்டியில் காயம் காரணமாக இஷான் கிஷன் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கி 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது இஷான் கிஷன் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி வெளியேற்றப்பட்டு மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்பட இருக்கிறார்.
அதேபோல் முதல் 2 போட்டிகளில் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் விளையாடி இருந்தார். முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. 2வது போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினாலும், 50 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் 3வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் பெஞ்ச் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அவரது இடத்தில் மயங்க் யாதவ் கம்பேக் கொடுக்கலாம் என்றும், இல்லையென்றால் குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி இடம்பெறலாம் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன. 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் ஆகிய இரு ஸ்பின்னர்களும் பந்தை நன்றாக கிரிப் செய்து கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இதனால் ஒரு ஸ்பின்னர்களை இந்திய அணி கூடுதலாக சேர்க்கலாம் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
