புவனேஷ்வர் குமார் பந்து வீசனும், நான் அடிக்கனும்.. ஐ எம் வெயிட்டிங்... வார்னர்!
பெங்களூரு: உலகத் தரம் வாய்ந்த பவுலராக மாறியிருக்கிறார் புவனேஷ்வர் குமார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி பவுலர்களில் முதலிடம் பிடித்துள்ளார் ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை மிக புத்திசாலித்தனமாக போட்டு பெங்களூர் தப்பித் தவறி கூட தப்பிப் பிழைத்து விடாமல் காத்தவர் புவனேஷ்வர் குமார்தான்.
இந்த நிலையில் கேப்டன் வார்னர், புவனேஷ்வர் குமாரை புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக விளையாடவும் தான் பெரும் ஆர்வமுடன் இருப்பதாகவும் வார்னர் தெரிவித்துள்ளார்.

பெஸ்ட் பவுலர்
இதுகுறித்து வார்னர் கூறுகையில், புவனேஷ்வர் இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருக்கிறார் என்றாலும் கூட அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அபார திறமையாளர்.

அவருக்கு எதிராக ஆட வேண்டும்
ஒரு தொடக்க ஆட்டக்காரராக, ஆஸ்திரேலிய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக களம் இறங்க ஆர்வமாக இருக்கிறேன். அந்த அளவுக்கு தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் புவனேஷ்வர் குமார்.

முதல் பந்திலிருந்தே
ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதல் பந்திலிருந்தே அசத்தி விட்டார் புவனேஷ்வர் குமார். சந்தேகமே இல்லாமல் அவர் தரம் வாய்ந்த பவுலர்.

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்
புவனேஷ்வர் குமார் மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. விளையாட்டு மீது அவருக்கு இருக்கும் காதல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மிக நேர்த்தியாக, லட்சியத்துடன் அவர் கிரிக்கெட்டை ஆடுகிறார். போட்டியை அனு அனுவாக ரசிக்கிறார். அவர் மீது எனக்கு எப்போதுமே நிறைய நம்பிக்கை உண்டு. அதை பூர்த்தி செய்யத் தவறாதவர் புவனேஷ்வர் குமார்.

முஸ்தபிசுர்
அதேபோல வங்கதேசத்தைச் சேர்ந்த இளம் வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு அபாரமான பந்து வீச்சாளர். வங்கதேசத்திற்காக அவர் பல சாதனைகளைப் படைப்பார் என நான் நம்புகிறேன். இந்தத் தொடரிலும் அவர் அபாரமாக தனது திறனை வெளிப்படுத்தினார் என்றார் வார்னர்.


Click it and Unblock the Notifications