4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி கம்பேக்.. சின்னசாமி மைதானத்தில் புவனேஸ்வர் குமாரின் சாதனை
பெங்களூர்: இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 அரங்கில் மீண்டும் காலடி எடுத்து வைக்க உள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் உள்ள தேசிய சிறப்பு பயிற்சி மையத்தில் தயாராக இருந்த புவனேஸ்வர் குமார் முன்னதாகவே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடருக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது கம்பேக், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5-வது டி20 போட்டியிலேயே அரங்கேற அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
புவனேஸ்வர் குமாருக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் எப்போதுமே மறக்க முடியாத வரலாற்று நினைவுகளைக் கொண்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது முதல் அறிமுகமே இதே மைதானத்தில்தான் நிகழ்ந்தது. கடந்த 2012 டிசம்பர் 25 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான புவனேஸ்வர், தனது அசாத்திய ஸ்விங் பந்துவீச்சால் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து நசீர் ஜம்ஷெட், அகமது ஷெசாத், உமர் அக்மல் ஆகியோரை வெளியேற்றி 9 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். அன்று அவரது எகானமி வெறும் 2.25 மட்டுமே.

பெங்களூரு மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 29 விக்கெட்டுகளை புவனேஸ்வர் வீழ்த்தியுள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் மட்டும் 19 இன்னிங்ஸ்களில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 23.35 ஆகவும், எகானமி 8.45 ஆகவும் உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் இந்த மைதானத்தில் ஆடிய 5 போட்டிகளில் மட்டுமே 11 விக்கெட்டுகளை அள்ளினார். சென்னை, லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடந்த ஏப்ரல் 18 அன்று டெல்லிக்கு எதிராக 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்ததே இங்கு அவரது சிறந்த ஐபிஎல் பந்துவீச்சாகும்.
இந்த மைதானத்தில் விராட் கோலியை 2 முறையும், கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜோஸ் பட்லர் போன்ற முன்னணி நட்சத்திரங்களையும் இவர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பெங்களூருவில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் வீரர்கள் அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதனால் குறுகிய எல்லைகளைக் கொண்ட சின்னசாமி மைதானத்தில், புவனேஸ்வரின் அபார அனுபவம் இந்திய அணிக்கு மாபெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

