79 பந்தில் 147 ரன்.. பவுண்டரியிலேயே 100 ரன்.. மரண அடி.. இவரையா வேண்டாம்னு டீமை விட்டு தூக்குனீங்க?
Recommended Video
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் மரண அடி அடித்து, 79 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார்.
அதன் மூலம், பிக் பாஷ் லீக் தொடர் சாதனைகள் மற்றும் டி20 சாதனைகளை அடித்து நொறுக்கி இருக்கிறார் அவர்.
ஐபிஎல்
அவரைத் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த ஐபிஎல் ஏலத்துக்கு முன் விடுவித்தது. அதற்காக ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருகிறார்கள். அதே சமயம், அவரை ஏலத்தில் வாங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி உற்சாகத்தில் உள்ளது.

என்ன போட்டி?
பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி ஆட்டம்
அந்த அணிக்கு மார்கஸ் ஸ்டோனிஸ், கார்ட்ரைட் துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். அவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் அந்த இன்னிங்க்ஸின் 20வது ஓவர் வரை திணறியது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.

ஸ்டோனிஸ் விளாசல்
இருவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடினார். 13 ஃபோர், 8 சிக்ஸர்கள் என பவுண்டரி மழை பொழிந்த அவர் 79 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

அசத்தல் ஜோடி
மார்கஸ் ஸ்டோனிஸ் - கார்ட்ரைட் ஜோடி 20 ஓவர் முடியும் வரை ஆட்டமிழக்காமல் ஆடும் என எதிர்பார்த்த நிலையில், கார்ட்ரைட் 20வது ஓவரின் முதல் பந்தில் 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்ச ரன் சாதனை
இந்தப் போட்டியில் 79 பந்துகளில் 147 ரன்கள் குவித்த ஸ்டோனிஸ், பிக் பாஷ் லீக் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், உலக அளவில் டி20 போட்டிகளில் 13வது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

சாதனை முறியடிப்பு
முன்னதாக 2018 பிக் பாஷ் லீக் தொடரில் டிஆர்சி ஷார்ட் 122 ரன்கள் அடித்ததே அந்த தொடரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்தார் ஸ்டோனிஸ்.

கூட்டணி செய்த சாதனை
மேலும், ஸ்டோனிஸ் - கார்ட்ரைட் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்ததும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. பிக் பாஷ் லீக் வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் இதுவே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் ஆகும். டி20 போட்டிகளில் இது 14வது 200+ பார்ட்னர்ஷிப் ஆகும்.
இவரையா டீமை விட்டு தூக்குனீங்க?
மேலும், ஸ்டோனிஸ் அடித்த 147 ரன்களில் 100 ரன்கள் அவர் அடித்த 13 ஃபோர் மற்றும் 8 சிக்ஸர்களில் இருந்து கிடைத்தது. இப்படி பவுண்டரியிலேயே 100 ரன் அடித்த வீரரைத் தான் முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு நீக்கியது. அதற்காக, அந்த அணியை கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications