மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்திய அணியில் சில மாற்றத்தை நிகழ்த்த பயிற்சியாளர் டிராவிட் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி காயத்திலிருந்து குணமடைந்து ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார் என தெரிகிறது. அப்படி நீக்கப்படும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் மாற்றப்படும். எனினும் இந்திய அணியின் டாப் 3 யில் எந்த மாற்றமும் இருக்காது. அதன்படி கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகவும் மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் களமிறங்குவார்கள்.
ஸ்ரேயாஸ் இல்லை என்றால் நம்பர் நான்காவது இடத்திற்கு கே எல் ராகுல் நகர்த்தப்படுவார். இதன் மூலம் ஐந்தாம் இடத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கும், ஆறாவது இடத்தில் சூரிய குமார் யாதவுக்கும் இடம் கிடைத்துவிடும். ஜடேஜா ஏழாவது இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா வர தாமதமானால் அதற்கும் ஒரு பிளானை இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்கிறது.
அதன்படி ஸ்ரேயாசை நீக்கிவிட்டு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை அணிக்குள் கொண்டு வருவது தான் அந்த நகர்வு. அதன்படி நான்காம் இடத்தில் கே எல் ராகுலும் ஐந்தாவது இடத்தில் ஜடேஜாவும் ஆறாவது இடத்தில் சூரிய குமார் யாதவும் ஏழாம் இடத்தில் தமிழக வீரர் அஸ்வினும் விளையாடக் கூடும். இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை இந்தியா, இலங்கை அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
இங்கு சுழற் பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக இருக்காது என்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்காது. இதனால் அன்றைய ஆட்டம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இருக்கும். அதில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றால் ஹர்திக் பாண்டியா வரும்போது அவர்தான் தன்னுடைய இடத்தை இழக்க நேரிடும்.