IPL 2026: சச்சின் மனம் கவர்ந்த 6.8 அடி உயரம் உள்ள வீரரை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனுக்காக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த டிசம்பரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்ததால், முசரபானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியபோது, முசரபானி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, போட்டியின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இடம்பிடித்தார்.
6 அடி 8 அங்குல உயரமுள்ள இந்த வேகப்பந்து வீச்சாளர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக வெற்றிக்குக் காரணமான அசத்தலான பங்களிப்பை வழங்கினார். "முசரபானி தனது உயரமான பவுன்ஸ் மற்றும் முக்கிய கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுக்காக அறியப்படுகிறார்," என கேகேஆர் அணி பாராட்டியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேகேஆர் அணி, "முசரபானிக்கு குறிப்பிடத்தக்க T20 அனுபவம் உண்டு. அவர் 80க்கும் மேற்பட்ட T20 சர்வதேச போட்டிகளில் சுமார் 21 சராசரியுடன் 90க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3/8 அவரது சிறந்த பந்துவீச்சாகும். அவருடைய வேகம், நிலைத்தன்மை ஆகியவை கேகேஆர் அணியின் வேகப்பந்து தாக்குதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளெஸ்ஸிங் முசரபானி மார்ச் 17 அன்று கொல்கத்தாவில் வந்து, கேகேஆர் அணியுடன் இணைவார். பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 இல் ஷமார் ஜோசப்புக்கு மாற்றாக அவர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், ஐபிஎல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.
முசரபானியின் அனுபவம் மற்றும் தற்போதைய ஃபார்ம், மூன்று முறை ஐபிஎல் சாம்பியனான கேகேஆர் அணிக்கு சாதகமாகும். கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கோப்பை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்தாலும், எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.
ஐபிஎல் 2026ல் கேகேஆர் அணியின் ஆரம்பகட்ட அட்டவணை: மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸை (மும்பை), ஏப்ரல் 2 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (கொல்கத்தா), ஏப்ரல் 6 அன்று பஞ்சாப் கிங்ஸை (கொல்கத்தா), ஏப்ரல் 9 அன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (கொல்கத்தா) எதிர்கொள்கிறது. அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங் போன்றோர் அடங்கிய வலுவான அணிக்கு முசரபானி பலம் சேர்ப்பார்.இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்சித் ராணா காயம் காரணம் விலகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications