50 ஆண்டுகளில் மிக முக்கிய தொடர்.. இந்திய சுற்றுப்பயணத்திற்கு ஆஸ்திரேலியா எடுத்த முடிவு
மும்பை: இந்தியாவிற்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடராக அமையவுள்ள இதற்காக, ஆஸ்திரேலியா தனது வழக்கமான உத்தியைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த முறையும் அவர்கள் எவ்வித பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாகத் தொடரில் களம் காணவுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் தொடங்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலியா விளையாடவிருக்கும் மிக நீண்ட டெஸ்ட் தொடராகும். இந்தியாவில் கடைசியாக ஆஸ்திரேலிய அணி 2004 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய துணைக்கண்ட சுற்றுப்பயணங்களின் போது ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டிகளைத் தவிர்த்து வந்தது. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் வழிகாட்டுதலின் கீழ், கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் அவர்கள் இதே உத்தியைக் கையாண்டனர். இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னதாக துபாயிலும், 2023 பார்டர்-கவாஸ்கர் தொடருக்காக பெங்களூரு அருகே உள்ள ஆலூர் பகுதியில் பயிற்சி முகாமையும் அவர்கள் நடத்தினர்.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் தொடர் தொடங்க வெறும் 12 நாட்களே இடைவெளி உள்ளது. இத்தகைய குறுகிய காலத்தில் இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள போதிய நேரம் இருக்கும் என்று பயிற்சியாளர் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
"இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாராக எங்களுக்கு போதிய நேரம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அதனால் எவ்வித பயிற்சிப் போட்டியிலும் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட தட்பவெப்பநிலை கொண்ட இடங்களில் பயிற்சி மேற்கொள்வோம். இதற்காக கடந்த காலங்களில் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களைத் தேர்வு செய்திருந்தோம். இந்த முறையும் வீரர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்று மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் அதே வீரர்கள் தான் இந்தியத் தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூற முடியாது என மெக்டொனால்ட் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப, அதற்குப் பொருத்தமான திறமைகளைக் கொண்ட வெவ்வேறு வீரர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

