அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பும்ராவின் கேப்டன் பதவி பறிக்கப்பட உள்ளது. இது பற்றி ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா இந்திய அணிக்கு இமாலய வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
பும்ரா பந்துவீச்சாளராக 8 விக்கெட் வீழ்த்தியதுடன், கேப்டன் ஆகவும் சரியான முடிவுகளை எடுத்தார். ஃபீல்டிங் நிறுத்துவதிலும், பந்துவீச்சாளர்களை சரியாக சுழற்சி முறையில் பயன்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பும்ராவின் கேப்டன் பதவி பறிக்கப்படும். ஏனெனில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி விட்டார். அவர் முதல் போட்டி நடந்த போது விடுப்பில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் அணியுடன் இணைந்திருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி மீண்டும் வழங்கப்படும்.
பும்ரா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பார். இந்த மாற்றத்தை சில இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். ரோஹித் சர்மா தலைமையில் சமீபத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோசமாக சொதப்பி இருந்தது. இந்திய அணி அந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கும் பும்ராவே மீதம் உள்ள நான்கு போட்டிகளிலும் கேப்டனாக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பிசிசிஐ இதை செய்யாது என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 அன்று அடிலெய்டு மைதானத்தில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியின் போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.