பவுலர்களுக்கு நேரமே சரியில்லை... குறுகிய காலத்திற்குள் 2 உலக சாதனைகள்!
சென்னை: பவுலர்களுக்கு நேரம் சரியில்லை போலும். சமீபத்தில்தான் ஒரு நாள் பேட்டிங்கில் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டி20 போட்டியில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு எதிராக புதிய உலக சாதனையைப் படைத்தது இங்கிலாந்து அணி. அது இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி. அப்போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 444 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை கதறடித்தது. அது ஒரு உலக சாதனையாகும்.

அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இங்கிலாந்து அதிரடியாக கைப்பற்றியது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்று எப்படி டி20 போட்டியில் இலங்கையின் உலக சாதனை முறியடிக்கப்பட்டதோ அதேபோலத்தான் இங்கிலாந்து அணியும் அன்று இலங்கையின் உலக சாதனை ரன் குவிப்பை முறியடித்தது. 2006ல் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை குவித்திருந்த 9 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் என்ற சாதனையைத்தான் இங்கிலாந்து முறியடித்தது.
இன்றும் இலங்கையின் சாதனையை அதே இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா டி20 போட்டியில் முறியடித்துள்ளது. மொத்தத்தில் இலங்கைக்கும் நேரம் சரியில்லை, பவுலர்களுக்கும் நேரம் சரியில்லை என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications