வார்ம்-அப் செய்யும்போதே சரிந்து இறந்த கோச்..பிபிஎல் டி20 போட்டி தொடங்கும் முன் நடந்த சோகம்
தாகா: 2025 வங்கதேச பிரீமியர் லீக் (BPL) டி20 போட்டியின் போது, தாகா கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் மைதானத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது. வங்கதேச பிரீமியர் லீக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை அன்று தாகா கேபிடல்ஸ் (Dhaka Capitals) மற்றும் ராஜ்ஷாஹி வாரியர்ஸ் (Rajshahi Warriors) அணிகள் மோதவிருந்தன. இரு அணிகளும் போட்டிக்காகத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
போட்டி தொடங்குவதற்குச் சில நிமிடங்களே இருந்தன. தாகா கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளரான மஹ்பூப் அலி ஜாகி வீரர்களுடன் வார்ம்-அப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக மைதானத்திற்குள் விரைந்து அவருக்கு சிபிஆர் (CPR) எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவசர ஊர்தி மூலம் அல் ஹரமைன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
யார் இந்த மஹ்பூப் அலி ஜாகி?
மஹ்பூப் அலி ஜாகி வங்கதேச கிரிக்கெட்டில் நன்கு அறியப்பட்ட நபர் ஆவார். அவருக்கு 59 வயது ஆகிறது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், தாகா பிரீமியர் லீக்கில் அபஹானி மற்றும் தன்மோண்டி போன்ற பெரிய கிளப்களுக்காக விளையாடியவர்.
2008-ம் ஆண்டு முதல் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் (BCB) பயிற்சியாளராக இணைந்த இவர், இளம் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, 2016 டி20 உலகக்கோப்பையின் போது வங்கதேச பவுலர் தஸ்கின் அஹமதுவின் பந்துவீச்சு முறை சர்ச்சைக்குள்ளானபோது, அதைச் சரிசெய்து அவரை மீண்டும் கிரிக்கெட்டிற்குள் கொண்டு வந்ததில் ஜாகிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
மைதானத்தில் மௌன அஞ்சலி
ஜாகியின் திடீர் மறைவு செய்தியைக் கேட்டு, சில்ஹெட் டைட்டன்ஸ், நவகாளி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மற்ற அணி வீரர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஜாகிக்கு எந்த உடல்நலக் குறைபாடும் இல்லை என்றும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். "வங்கதேச கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு வளர்ச்சிக்கு ஜாகி ஆற்றிய பங்கு அளப்பரியது. ஈடு செய்ய முடியாத இழப்பு இது" என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications