பென் ஸ்டோக்ஸுடன் கருத்து வேறுபாடா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரெண்டன் மெக்கல்லம்
லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்களது உறவு இன்னும் வலுவாகவே இருப்பதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி பெற்ற வெற்றிக்குப் பிறகு, அணியின் புதிய நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் கீழ் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சர்ச்சை தீவிரமடைந்தது. பின்னர், அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு, இருவரும் ட்ரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

கருத்து வேறுபாடுகளை மறுத்த மெக்கல்லம்
"பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக இருக்கிறார். இன்று காலை அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினேன். அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது," என்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மெக்கல்லம் கூறினார். மேலும், "என்னைப் பொறுத்தவரை அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும், போட்டியில் களமிறங்கத் தயாராகவும் இருக்கிறார். இந்த வாரப் போட்டி குறித்து அவர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளார். எங்களைப் பொறுத்தவரை, அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இடையே விரிசல் இருப்பதாக வெளியான செய்திகளை மேலும் தீவிரப்படுத்தியது. ஸ்டோக்ஸின் நலம் குறித்து மெக்கல்லம் பொதுவெளியில் கவலை தெரிவித்த கருத்துகள் ஸ்டோக்ஸுக்கு வியப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ராப் கீ இடையே நடந்த சந்திப்பும் சுமுகமாக அமையவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) புதிய நேரக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக வரையறுக்கப்படவில்லை என்பதை ECB ஒப்புக்கொண்டதன் மூலம், இந்த விதிகளின் புரிதல் மற்றும் தகவல்தொடர்பில் இருந்த முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. கடந்த ஆஷஸ் தொடரின் போதே இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான போதிலும், அணியை வழி நடத்துவதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
உறவில் எந்தப் பாதிப்பும் இல்லை
உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை மெக்கல்லம் திட்டவட்டமாக மறுத்தார். "நானும் அவரும் இன்று காலை இதுபற்றி விரிவாகப் பேசினோம். ஆம், எங்களுக்குள் வலுவான விவாதங்கள் நடப்பது உண்மைதான். ஆனால், ஒரு அணியை வழிநடத்தும் தலைவர்கள் தங்களுக்குள் இத்தகைய விவாதங்களை நடத்தவில்லை என்றால் மட்டுமே நாம் ஏமாற்றம் அடைய வேண்டும்," என்றார்.
இந்த வதந்திகள் எங்கிருந்து பரவுகின்றன என்பது தனக்குத் தெரியவில்லை என்று கூறிய மெக்கல்லம், "கடந்த ஆறு மாதங்களாக நமது உறவைக் குறித்து வெளியாகும் செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியுமா? என நான் ஸ்டோக்ஸிடம் கேட்டேன். அதற்கு அவர், 'எனக்குத் தெரியாது' என்று பதிலளித்தார். உடனே நான், 'என்னைப் பொறுத்தவரை உங்களை நான் ஒரு சிறந்த நண்பராகவே கருதுகிறேன்' என்று அவரிடம் கூறினேன்" என்றார்.
இந்தச் சம்பவத்தை ஒரு 'சிறு பின்னடைவு’ என்று குறிப்பிட்ட மெக்கல்லம், இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டோக்ஸ் மீதான மதிப்பு என்றும் குறையாது என்றும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுவதில் அணி முழு கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
