டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை கடந்த சில வாரத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கடந்து வந்த கிரிக்கெட் பாதை குறித்து அவர் எழுதியிருக்கிறார். இதில் தோனி குறித்து அவர் எழுதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
18 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ்க்கு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அது டெஸ்ட் போட்டி ஒன்றில் தோனி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக குவித்து வந்திருக்கிறார்.

குறிப்பாக ஆட்டத்தின் 150ஆவது ஓவரில் தோனி ஹார்ட்ரிக் சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இந்த சூழலில் ஐந்தாவது பந்தில் தோனி பெரிய ஷாட் ஆட முற்பட்டபோது, அது பவுண்டரி லைனில் டேரன் கங்கா இடம் கேட்ச் ஆனது. இதில் டேரன் கங்கா பவுண்டரி லைனில் காலை வைத்தது போல் தெரிந்தது.
இதனால் நடுவர்கள் இதை அவுட்டா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்தனர். ஆனால் கேமராவில் டேரன் கங்கா கால் வைத்த காட்சி பிரேமில் தெரியாமல் மறைந்தது. இதனால் இது அவுட் கொடுப்பதா வேண்டாமா என்று நடுவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது கோபமடைந்த லாரா தோனியிடம் நேராக வந்து என் வீரர் இதை கேட்ச் பிடித்து விட்டார்.
அவர் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. நீங்கள் களத்தை விட்டு வெளியேறுவது தான் சரி என்று கூறியிருக்கிறார். உடனே தோனி, டேரன் கங்காவிடம் கேட்டபோது எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று நடுவர்கள் முழித்துக் கொண்டிருந்தபோது அப்போதைய கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் இந்தியாவின் ஆட்டத்தை டிக்ளர் செய்து கொண்டார்.
இந்த போட்டியில் முதலில் இந்திய அணி 241 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலுக்கு 371 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்து இருந்தது. 392 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தபோது ஆட்டநேரம் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது.கடைசி விக்கெட்டை எடுக்க இந்தியாவுக்கு 19 பந்துகள் எஞ்சி இருந்தது.
ஆனால் இந்தியாவால் கடைசி விக்கெட்டை எடுக்க முடியாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதுபோன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிய நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது. அப்போது நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தோனியை குறித்து பிரைன் லாரா தன்னுடைய புத்தகத்தில் எழுதியதால் தற்போது இந்த விஷயம் 2கே கிட்ஸ்களுக்கு தெரிய வந்துள்ளது.