எத்தனை நாள் என்பதல்ல.. என்ன ரிசல்ட்டுங்குறதுதான் முக்கியம் -லாரா
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டை எத்தனை நாள் விளையாடுகிறோம், எவ்வளவு நேரம் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. ரிசல்ட் தேவை. அதை மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தனி ஒரு வீரராக அதிக ரன்களைக் குவித்த சாதனைக்குரியவர் லாரா. அவர் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே இதுவரை சாதனையாகும். இதை யாரும் இன்னும் முறியடிக்கவில்லை.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூறப்பட்டு வரும் பல்வேறு யோசனைகள், மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பிரையன் லாரா.

பலவித சர்ச்சைகள்
கிரிக்கெட்டின் உண்மையான வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் போட்டிகளில் தற்போது ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய ஐசிசி முடிவெடுத்து அதை 4 நாட்களாக குறைக்கும் யோசைனையை வெளியிட்டுள்ளது. இந்த முடிவிற்கு இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் பிரையன் லாரா
இதுகுறித்து லாரா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. ரிசல்ட் வருவது போல இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அதேபோல பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் என்பது ஒரு கவர்ச்சியான விஷயம் மட்டுமே. அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேறு எந்த லாபத்தையும் தராது. வளர்ச்சிக்கும் உதவாது என்று தெரிவித்துள்ளார்.

சலிப்பு ஏற்படக் கூடாது
டெஸ்ட் கிரிக்கெட் என்பது அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். அது நான்கு நாள் கொண்டதாக இருந்தாலும் சரி 5 நாள் கொண்டதாக இருந்தாலும் சரி, ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாதபடி அது இருக்க வேண்டும். போட்டியில் ஒரு முடிவு தெரிய வேண்டும். அதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் அதில் விருப்பமும் கூடும். எத்தனை நாள் விளையாடுகிளோம் என்பது முக்கியமே இல்லை. ரிசல்ட்தான் முக்கியம் என்று லாரா மேலும் கூறியுள்ளார்.

11,953 ரன்கள் குவிப்பு
லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,953 ரன்களைக் குவித்துள்ளார். தற்போது நடைபெறவுள்ள ரோட் சேப்டி உலக சீரிஸ் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு கேப்டனாக களம் காண்கிறார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்
அதேபோல பகல் இரவு டெஸ்ட் போட்டியும் தற்போது ஆங்காங்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா -வங்கதேசம் இடையிலான பகல் இரவு போட்டி நடைபெற்றது. இதுகுறித்து லாரா கூறுகையில், இது வெறும் கவர்ச்சிதான். டெஸ்ட் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் என நான் நினைக்கவில்லை. வேறு வகையான சீர்திருத்தங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications