கேஎல் ராகுல் என்ற சனி பகவான் பார்வையிலிருந்து விலகிய இந்திய அணி.. இனி நல்ல எதிர்காலம் இருக்கு
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் பிசிசிஐயால் அடையாளப்படுத்தப்பட்டது ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஏனென்றால் கேப்டனாக ராகுல் இதுவரை எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது கிடையாது.
கேப்டனாக பொறுப்பேற்று ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையும் கேஎல் ராகுலுக்கு சேரும்.
வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் வெற்றி பெற்றாலும் அவர் அணியை தேர்வு செய்த விதம் அந்த தொடரில் இந்தியாவுக்கு பெரிய வேட்டு வைத்திருக்கும்.

தப்பித்த பிசிசிஐ
சிறப்பாக விளையாடி வந்த குல்தீப் யாதவை நீக்கிவிட்டு மூன்று வேக பந்துவீச்சாளர்களுடன் கே எல் ராகுல் களமிறங்கியதில் இருந்தே அவருடைய கேப்டன்ஷிப் அறிவு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில் கே எல் ராகுலின் பேட்டிங்கும் படுமோசமாக இருப்பதால் இனி அவரை நம்பினால் இந்திய அணி நடு ஆற்றில் தான் தவிக்க வேண்டும் என பிசிசிஐ கடைசியாக புரிந்து கொண்டது.

அடுத்த கேப்டன் இல்லை
இதனை அடுத்து இலங்கைத் தொடருக்கான ஒரு நாள் மற்றும் டி20 அணியில் துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். டி20 அணிக்கு துணை கேப்டன் ஆக சூரிய குமார் யாதவும் ,ஒரு நாள் துணை கேப்டன் ஆக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் இந்திய அணியின் அடுத்த கேப்டன் பந்தயத்தில் இருந்து கே எல் ராகுல் விலகி இருக்கிறார்.

நல்ல காரியம்
ஹர்திக் பாண்டியா நல்ல தேர்வாக இருப்பார் என்று அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு செய்த உருப்படியான காரியங்களில் இதுதான் முதன்மையானது என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு இல்லாததால் அவர் பழையபடி தனது பேட்டிகளில் கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாக அமையும் .கேஎல் ராகுல் இதை பின்னடைவாக கருதாமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று கவனம் செலுத்தினால் அது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்லது.

திறமையை நிரூபிப்பாரா?
கேஎல் ராகுல் இடமிருந்து இந்திய அணி தப்பித்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தான் அவரை நம்பி பல கோடிகள் முதலீடு செய்து அணியை வாங்கி இருக்கிறார்கள். இதனால் ராகுலிடமிருந்து லக்னோ அணி தப்பிக்குமா இல்லை சிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதேபோன்று ராகுல் தனது கேப்டன்ஷிப் திறமையை நிரூபிக்க ஐபிஎல் தொடரை வென்று காட்ட வேண்டும் என்ற உத்வேகத்திலும் இருப்பார் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் கேப்டன் பதவியில் ஜொலிக்கவில்லை என்பதை கேஎல் ராகுல் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications