மொஹாலி : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு பிறகு கேப்டனாக திரும்பியுள்ள விராட் கோலி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
டுபிளஸிஸ் ஈடுப்பில் ஏற்பட்ட காயத்தால் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண், முதலில் பந்துவீசினார். இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய டுபிளசிஸ், விராட் கோலி ஜோடி முதலில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, டுபிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற, பெங்களூரு அணி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது,
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்தது. அதர்வா 4 ரன்களிலும், அதிரடி வீரர் ஷார்ட் 8 ரன்களிலும் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹர்பிரித் சிங் 13 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார்.
இதே போன்று பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரணும் ரன் அவுட் ஆக, பஞ்சாப் அணிக்கு அது பெரிய இடியாக அமைந்தது. இதனால் 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. தொடக்க வீரர் பிராப்சிம்ரன் சிங் மட்டும் தனி ஆளாக நின்று போராடி 30 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். கடந்த ஆட்டத்தில் அணிக்கு வெற்றி தேடி தந்த ஷாரூக்கான் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 18வது ஓவர் வீசிய முகமது சிராஜ், 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜித்தேஷ் சர்மா மட்டும் போராடினார். எனினும் அவரும் 27 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஹர்சல் பட்டேல் ஓவரில் கேட்ச் ஆக, பஞ்சாப் அணி 150 ரன்களில் சுருண்டு 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிராஜ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.