மும்பை: உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் டாப் 7 பேட்டிங் வரிசையில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். ஆசியக் கோப்பைத் தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக்கோப்பைத் தொடர் என்று ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு ஏறிக் கொண்டே செல்லும். அதற்காக இந்திய அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக ஆசியக் கோப்பைத் தொடரிலேயே இந்திய அணி தேர்வை முடிக்க ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யார் மிடில் ஆர்டரில் களமிறங்க தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் நிச்சயம் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதில், ஜடேஜா ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கிறார். இதையடுத்து டாப் மற்றும் மிடில் ஆர்டரில் 2 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும். அதில் ஒருவர் இஷான் கிஷன். ஏனென்றால் ரிஷப் பண்ட் காயமடைந்த பின், 10 முதல் 15 மாதங்களாக இஷான் கிஷன் தான் இந்திய அணியுடன் இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி இருக்கிறார். அவருக்கு விக்கெட் கீப்பர் இடத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதன்பின் மீதமிருக்கும் ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேடலில் தான் தேர்வுக் குழுவினரின் பங்கு இருக்கிறது. என்னை பொறுத்தவரை யார் ரன்கள் சேர்க்க கொலைப்பசியுடன் இருக்கிறார்களோ, அவர்களை தேர்வு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை திலக் வர்மாவின் ஆட்டம் மிரட்டலாக உள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை வைத்து மிடில் ஆர்டரில் திலக் வர்மாவுக்கு இடமளிக்கலாம். அதற்கு திறமையை அவர் வெளிப்படுத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 173 ரன்கள் குவித்தார் திலக் வர்மா. அடுத்ததாக அயர்லாந்து டி20 தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், திலக் வர்மாவுக்கான வாய்ப்பு ஆசியக் கோப்பையில் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.