காயத்தோடு டெஸ்ட் போட்டியில் விளையாட செல்லும் பும்ரா.. இதுதான் பிட்னெஸ்ஸா?
Recommended Video

காயத்தோடு விளையாட செல்லும் பும்ரா...இதுதான் பிட்னெஸ்ஸா?- வீடியோ
மும்பை : இடதுகை பெருவிரல் காயத்தில் இருந்து முழுவதுமாக, குணமடையாத ஜஸ்ப்ரிட் பும்ரா, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தோடு ஒருநாள் போட்டியில் விளையாடியது சர்ச்சையான நிலையில், தற்போது அதே போல காயத்தோடு இருக்கும் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்தது. அடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தோடு ஒரு நாள் போட்டியில் ஆடினார். காயம் குணமாகாத நிலையில் டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோருடன், பும்ராவும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், டெக்கான் க்ரோனிக்கல் பத்திரிக்கையிடம் அளித்த தகவலின்படி, “பும்ராவுக்கு இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த வரையில் அந்த காயத்திற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி பெறவில்லை. உத்தேசமாக, பும்ரா மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். ஆனால், வலது கை பந்து வீச்சாளரான அவருக்கு, இடது கையில் தான் காயம் ஏற்பட்டுள்ளது என்பதால், அணி நிர்வாகம் வேறு பந்து வீச்சாளர்கள் சரியாக அமையாத பட்சத்தில் இவரை பயன்படுத்தலாம். அவரது காயம் பட்ட விரலில் கட்டு போட்டுக் கொண்டு, அவரை முழுமையாக கூட பயன்படுத்த வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
அந்த அதிகாரி யோ-யோ டெஸ்ட் பற்றி கூறுகையில், “என்னை பொறுத்தவரை உடற்தகுதி தேர்வை நிச்சயம் கட்டாயமாக்க வேண்டும். ஆனால், தேர்வு என்றால் பல கட்ட தேர்வாக இருக்க வேண்டும். பல்வேறு தகுதிகளையும் பல கட்ட தேர்வுகளால் பரிசோதிக்க வேண்டும். தற்போது வீரர்கள் அனைவரும் உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள பெங்களூருக்கு செல்கிறார்கள். அங்கே, பல கட்ட தேர்வுகளை நடத்த தேவையான நேரம் உள்ளது. ஒரு வீரர் எந்த அளவு தாக்குப்பிடிப்பார் என்பதை மட்டும் சோதிக்காமல், பல்வேறு தேர்வுகளால் முழுவதுமாக சோதிக்க வேண்டும்” என்றார்.
யோ-யோ தேர்வில் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என ரவி சாஸ்திரி உள்ளிட்ட, அணி நிர்வாகத்தினர் பலரும் கூறினர். யோ-யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்ற புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் காயத்தோடு அணியில் சேர்க்கப்படுவது, களத்தில் விளையாடுவது எந்த வகையில் “உடற்தகுதி”? என்ற கேள்விகளுக்கு இங்கே பதிலில்லை. இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து பங்கு பெற்று வந்த விரிதிமான் சாஹா, தற்போது காயத்தால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, July 24, 2018, 9:13 [IST]
Other articles published on Jul 24, 2018


Click it and Unblock the Notifications