ரிஷப் பண்ட் யாரென்றே தெரியாது.. உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்.. என்ன நடந்தது என ஓபன் டாக்!
ஹரியானா: ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியிருந்த போது என்ன நடந்தது? பொருட்கள் திருடப்பட்டதா என்பது குறித்து அவரை காப்பாற்றிய ஹரியானா பேருந்து ஓட்டுநர் முழு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ரிஷப் பண்ட்-ன் கார் விபத்து பற்றி தான். டெல்லிக்கு தனி நபராக காரை ஓட்டிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார்.
இதனையடுத்து படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

காப்பாற்றியது யார்?
இந்நிலையில் ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றியது யார்? அங்கு என்னதான் நடந்தது என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சுஷில் மான். இவர் வழக்கம் போல அதிகாலை பணியில் இருந்துள்ளார். இவர் தான் காரில் சிக்கியிருந்த ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றி அவருக்கு போர்வை கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ஓபன் டாக்
இந்நிலையில் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார். அதில், விபத்து சத்தம் கேட்டவுடன் பஸ்ஸை நிறுத்திவிட்டு, ஓடினேன். ஏதேனும் பேருந்தில் மோதி கார் சுழன்றுள்ளது என முதலில் நினைத்தேன். ஓட்டுநர் சீட்டில் இருந்த ரிஷப் பண்ட் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பாதி வெளியே வந்துவிட்டார். சிக்கியிருந்த அவரை பிடித்து முழுவதுமாக வெளியேற்றினோம்.

யாரென்று தெரியாது
அவர், தன்னை ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், தனது தாய்-க்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவும் என்றும் கூறினார். ஆனால் தாய்-ன் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நான் கிரிக்கெட் பார்ப்பவன் அல்ல, அதனால் பண்ட் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால் அவர் யார் என எனது பேருந்தில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

குவியும் பாராட்டுக்கள்
பண்ட்-ஐ மீட்டவுடன் காரில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். ஆனால் யாரும் இல்லை. அவரின் பை ஒன்றும், ரூ. 7000 பணமும் தான் காரில் இருந்தது. அதனை வேகமாக எடுத்து, ஆம்புலன்ஸில் செல்கையில் அவரிடம் கொடுத்துவிட்டேன் என சுஷில் மான் கூறியுள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications