“திரும்ப வந்துட்டேனு சொல்லு” இந்தியாவுக்கு வந்த அச்சுறுத்தல்.. 3வது டெஸ்டில் ஆஸி, அணிக்கு அசுர பலம்
மும்பை: இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. குறிப்பாக 2 உலக தரமான வீரர்களை முழுமையாக தயார் செய்து களமிறக்குகின்றனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தான் வெற்றி கண்டுள்ளது
அதுவும் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி மற்றும் 2வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி என ஆஸ்திரேலியாவை பந்தாடியுள்ளனர். இதற்கெல்லாம் 3வது டெஸ்டில் பதிலடி கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

3வது டெஸ்ட் போட்டி
3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடரில் இருந்தே விலகுகிறார். இதே போல கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு விரைந்துள்ளார். அவர் 3வது போட்டி தொடங்குவதற்குள் வந்துவிடுவார் எனக்கூறப்பட்டுள்ளது. டாட் மர்ஃபிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிரடி மாற்றங்கள்
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் 3வது டெஸ்டில் விளையாடவுள்ளனர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவர்கள் இருவரும் முதல் 2 டெஸ்டில் வருவார்கள் எனக்கூறிவிட்டு, பின்னர் ஃபிட்னஸ் இல்லாமல் போனது. ஆனால் தற்போது முழு ஃபிட்னஸுடன் செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் பயிற்சியாளர்களே சான்றிதழ் கொடுத்துவிட்டனர்.

என்ன ஸ்பெஷல்
இந்திய களங்களில் மிகச்சிறப்பாக செயல்படக்கூடிய திறமை உள்ளவர் ஸ்டார்க். ப்ளாட்டான பிட்ச்-களில் அவரால் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் தாக்கம் ஏற்படுத்த முடியும். கடந்த காலங்களில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் இவரை எதிர்கொள்ள திணறியதை பார்த்திருப்போம். இதே போல கேமரூன் கிரீன் டாப் 6 வரிசைக்குள் பல களமிறங்கி அதிரடி காட்டக்கூடியவர். ரிஷப் பண்ட்-ஐ போலவே இவரும் எப்படிப்பட்ட களம் என்பதை பார்க்காமல் பேட்டை சுழற்றுவார். இதே போல பவுலிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

பிட்ச் சலுகை
இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி முதல் இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் ஆகியோர் காம்போ இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கலாம்.


Click it and Unblock the Notifications