நீங்க என்ன சதம் அடிச்சிருக்கீங்க.. பவுலிங்கில் சதமடித்த பல்தான் பங்காளி.. ஆஸ்திரேலிய வீரர் பரிதாபம்
இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் 10 ஓவர்கள் வீசி 103 ரன்கள் விட்டுக் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 72* ரன்களும், கேப்டன் கேஎல் ராகுல் 52 ரன்களும் விளாசினர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 103 ரன்களை விட்டுக் கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேட்டிங் சதம் விளாசிய பார்த்திருக்கிறோம், ஆனால் பவுலிங் சதம் விளாசி இப்போது தான் பார்ப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவம் இருந்தும் கேமரூன் க்ரீன் மோசமான பந்துவீசியுள்ளார். அவரது பந்துவீச்சில் மட்டும் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்கள் பட்டியலில் கேமரூன் க்ரீன் 2வது இடம் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிக் லூவிஸ் 113 ரன்களை விட்டுக் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார். அவருடன் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்து முதலிடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்களுக்கு பின் இன்றைய ஆட்டத்தில் 103 ரன்களை விட்டுக் கொடுத்த கேமரூன் க்ரீன் இடம்பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications