நம்பர் 3 பேட்டிங் வரிசையில்.. வைபவ் சூர்யவன்ஷியால் ரன் சேர்க்க முடியுமா? கம்பீர் வைக்கும் டெஸ்ட்!
கிறிஸ்ட்சர்ச்: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு புதிய சோதனை உருவாகி இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இருந்து இஷான் கிஷன் காயம் காரணமாக விலகிய சூழலில், அந்த இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷி எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாகவே திலக் வர்மா நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். இஷான் கிஷன் தாமதமாக களமிறங்கினார். தற்போது 2வது டி20 போட்டியில் இஷான் கிஷன் காயம் காரணமாக விளையாட வாய்ப்பில்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கக் கூடும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தப் போட்டி நிச்சயமாக ஒரு சோதனையான களமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் வைபவ் சூர்யவன்ஷி வழக்கமாக தொடக்க வீரராக மட்டுமே ஆடி இருக்கிறார். அண்மையில் ஏசியன் கேம்ஸில் கூட வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகவும், சஞ்சு சாம்சன் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட்டனர்.
ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிச்சயமாக அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணியை பிரிக்க வாய்ப்பில்லை. இதனால் வைபவ் சூர்யவன்ஷி தான் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வழக்கமாக பவர் பிளேவில் அதிக ரன்களை விளாசக் கூடிய வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின் கொஞ்சம் அதிரடியை குறைத்து கொள்வார்.
நியூசிலாந்து பிட்சில் ஸ்விங் மற்றும் பவுலிங் இருக்கும் என்பதால், வைபவ் சூர்யவன்ஷியால் ரன்களை சேர்க்க முடியும். ஆனால் பவர் பிளேவுக்கு வெளியில் களமிறங்கினால், அவரால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினால், அடுத்த சில போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
