“இந்த வீரர்களை நீக்கினால் உன் உயிருக்கு..” மரண பீதியில் கனடா கிரிக்கெட்.. பிஷ்னோய் கும்பல் மிரட்டல்
ஒட்டாவா: "இந்த குறிப்பிட்ட வீரர்களை மட்டும் அணியில் இருந்து நீக்கினால் உங்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்படும்... அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கனடா கிரிக்கெட் அணி அதிகாரியிடம் நேருக்கு நேர் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சாதாரண மிரட்டல் அல்ல, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுக்குப் பெயர் போன ஒரு பயங்கரவாதக் கும்பலிடம் இருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இதனால் கனடா கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தற்போது மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
கனடாவின் பிரபல புலனாய்வு நிகழ்ச்சியான 'தி பிஃப்த் எஸ்டேட்', 'ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்' என்ற தலைப்பில் வெளியிட்ட ஆவணப்படம் உலக கிரிக்கெட் வட்டாரத்தையே உலுக்கியுள்ளது. கடந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் சென்னையில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்ததாக ஐசிசி விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் பிஷ்னோய் கும்பல் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

யார் இந்த பிஷ்னோய் கும்பல்?
இந்தியாவில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான இந்தக் கும்பல், ஒரு மிகப்பெரிய குற்றப் பின்னணி கொண்டது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு முதல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது வரை இவர்களது அட்டூழியங்கள் நீள்கின்றன. கனடாவில் அதிகப்படியான இந்திய வம்சாவளியினர் வசிப்பதைப் பயன்படுத்தி, அங்கு உள்ளூர் மாஃபியாக்களுடன் இணைந்து இந்தக் கும்பல் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. மிரட்டிப் பணம் பறிப்பது மற்றும் சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடும் இவர்கள், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வைத்து கனடா நாட்டு அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. "குறிப்பிட்ட சில வீரர்களை அணியில் இருந்து நீக்கக் கூடாது, அப்படி நடந்தால் உன் உயிருக்கு ஆபத்து" என அந்தக் கும்பல் எச்சரித்துள்ளது. இதனால் பயந்துபோன ஒரு மாநில கிரிக்கெட் அதிகாரி போலீஸ் பாதுகாப்பைக் கோரியுள்ளார். மற்றொரு மூத்த அதிகாரியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அவர் தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளார்.
உலகக்கோப்பையில் முறைகேடு
இந்தக் கும்பலின் அழுத்தத்தால் தான், 2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென கேப்டன் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனுபவ வீரர் நிக்கோலஸ் கர்டனை நீக்கிவிட்டு, தில்பிரீத் பாஜ்வா கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாஜ்வா வீசிய 5-வது ஓவரில் தேவையற்ற நோ-பால் மற்றும் வைடு பந்துகள் மூலம் 15 ரன்கள் கசிந்தன. இது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
மைதானத்தில் விளையாட வேண்டிய வீரர்கள், இப்போது தங்களது உயிருக்குக் குறிவைக்கும் துப்பாக்கிகளைக் கண்டு நடுங்கிக் கிடக்கின்றனர். ஐசிசி இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பயங்கரவாதக் கும்பலின் தலையீடு இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவது இதுவே முதல் முறை என்பதால், கிரிக்கெட் உலகம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications