கேப்டனாகி முதல் போட்டியிலேயே அதிக ரன்கள்! 46 வருட சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி
அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி புதிதாக இரு சாதனைகளை படைத்துள்ளார்.
காயம் காரணமாக வழக்கமான கேப்டன் டோணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்காத நிலையில் இந்திய அணி கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி சதம் எடுத்து அசத்தியுள்ளார். இரு இன்னிங்சுகளுக்கு சேர்த்து, கோஹ்லி 256 ரன்களை விளாசியுள்ளார்.

இதற்கு முன்பு 1968ம் ஆண்டு சர்ச்பார்க்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் கிரகாம் டவுலிங் இரு இன்னிங்சுகளிலும் 244 ரன்கள் எடுத்திருந்ததுதான் சாதனை. அவர் முதல் இன்னிங்சில் 239 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 5 ரன்களும் எடுத்திருந்தார். இந்தியாவுக்கு எதிராக அந்த ரன்களை எடுத்திருந்தார். 48 வருடங்களுக்கு பிறகு கேப்டனாகிய முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை கோஹ்லி முறியடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளார்.
அதேபோல கேப்டனாக களமிறங்கி இரு இன்னிங்சுகளிலும் சதம் அடித்தவர் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. 1975ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த கிரேக் சேப்பல் 123 மற்றும் 109 ரன்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்திருந்தது இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. கோஹ்லி மட்டுமே கேப்டனாகி முதல் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் இரு இன்னிங்சுகளிலும் சதம் அடித்தவர் என்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications